தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு `குட்-பை’ ‘மீண்டும் மஞ்சப்பை’ பயன்பாட்டுக்கு வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சுற்றுச்சுழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு `குட்-பை’ சொல்லும் வகையில், அதற்கு மாற்று பொருளை பயன்படுத்தும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தின் மூலம் பொதுமக்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் என்ற நிகழ்ச்சியை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக விழாவுக்கு காலை 10.25 மணிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைவாணர் அரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்த, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட உள்ள பொருட்களின் கண்காட்சியை சுற்றிப் பார்த்தார். கண்காட்சியில் இருந்த பணியாளர்கள் முதல்வருக்கு, பிளாஸ்டிக் பொருளுக்கு பதிலாக பயன்படுத்த உள்ள பொருட்கள் குறித்து எடுத்துக் கூறினர்.‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தும், குறும்படத்தை வெளியிட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மஞ்சள் பை கொண்டு வந்தால், ‘வீட்டில் ஏதாவது விசேஷமா. பத்திரிகை கொண்டு வந்திருக்கிறீர்களா என்று கேட்ட காலம் ஒன்று உண்டு. அதன்பிறகு பிளாஸ்டிக் பை வந்து அதுதான் நாகரிகம், மஞ்சள் பை வைத்திருப்பது கேவலம் என்ற ஒரு சூழல் உருவானது. மஞ்சள் பை வைத்திருந்தாலே அவரை பட்டிக்காட்டான் என்று கிண்டல் செய்யக் கூடியவர்களும் உருவானார்கள். சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் கூட மஞ்சள் பையை கக்கத்தில் வைத்து ஒருவர் வந்தால் அவரை கிராமத்துக்காரர் என்று அடையாளம் காட்டுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.   அழகான, விதவிதமான பைகளை ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் தயாரித்து தங்களது போட்டிகளுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை வாங்குவதால் மஞ்சள் பையை எடுத்துச் செல்வது மக்கள் மத்தியிலும் குறைந்து விட்டது. அந்த மஞ்சள் பைதான் சூழலுக்கு, சுற்றுச்சூழலுக்கு சரியானது, அழகான, நாகரிகமான, பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளை கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு பயணம் ஆகும்.வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்தநாள் விழாவில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன். சுற்றுச்சூழல் பிரச்னைதான் மானுடத்தின் நாளொரு பிரச்னை என்பதை நான் வலியுறுத்தி சொன்னேன். அந்த சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு விளைவிப்பதுதான் பிளாஸ்டிக். அந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைத்தாக வேண்டும். இப்போது இந்த மஞ்சப்பை இருக்கிறது. பருத்தி செடியில் இருந்து பஞ்சு கிடைக்கிறது. அதிலிருந்து நூலாக நெய்கிறோம், பை தைக்கிறோம். அந்த பை கிழிந்தது என்றால், அதை கரித்துணியாக, மிதியடியாக வீட்டில் பயன்படுத்துகிறோம். ஆனால் பிளாஸ்டிக் மக்காது. அதுதான் சுற்றுச்சூழலை கெடுக்கிறது. ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக்தான் இந்த சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. அதுதான் நீர், காற்று என எல்லாவற்றையும் சீரழிக்கிறது. பிளாஸ்டிக்கை மண்ணில் போட்டால் மட்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் மண் கெடுகிறது. மண் கெட்டால் வேளாண்மை பாதிக்கிறது. கால்நடைகளும் இதை சாப்பிட்டு இறந்து போகின்றன. நீர்நிலைகளில் தூக்கி எறிந்தால் அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர் மாசுபடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களால் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கடல்சார் உயிரினங்கள் சாப்பிட்டு மடிந்து போகின்றன. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கை எரித்தால் அதிலிருந்து டையாக்சின் வேதி பொருள் காற்றில் கலந்து காற்று நஞ்சாகிறது. இதை சுவாசிக்கும் மனிதர்களுக்கு சுவாச கோளாறு, நுரையீரல் பாதிப்புக்கள் ஏற்படுகிறது.இதுபோன்ற பாதிப்புகளை உருவாக்குகின்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தியாக வேண்டும். இன்றைய பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது, உற்பத்தி செய்வது, ஓரிடத்தில் சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.மக்கும் தன்மையுடைய மாற்றுப்பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 130 தொழிற்சாலைகளுக்கு இதுவரை மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களையும் அரசு செய்து வருகிறது. உணவகம், திருமண மண்டபங்கள், உணவு பாதுகாப்பு துறை என அனைவரையும் அழைத்து பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருநகரங்களில் மண்டல மாநாடு நடத்தப்பட்டது. அரசாங்கம் நினைத்தால் மட்டும் இதனை செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும். அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழக்கூடிய தமிழ்நாடு சுற்றுச்சூழலை காப்பதிலும் முன்னிலை வகிக்க வேண்டும். இயற்கையை காப்போம், இயற்கையோடு இணைந்து காப்போம். இயற்கையை கெடுக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மஞ்சப்பை என்பதை யாரும் அவமானமாக கருத வேண்டிய அவசியம் இல்லை. சுற்றுச்சூழலின் அடையாளத்தை காப்பவரின் அடையாளம்தான் இந்த மஞ்சப்பை. அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையுரை ஆற்றினார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஜெர்மன் நாட்டின் துணை தூதர் காரின் கிறிஸ்டினா மரியா ஸ்டோல், வனத்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உதயன் நன்றி கூறினார்.* 20 நிமிடம் பயன்பாடு 100 ஆண்டு பாதிப்புசுற்றுலா துறை மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு வரவேற்று பேசும்போது, ‘‘ஒரு பிளாஸ்டிக் பையை பொதுமக்கள் சராசரியாக 20 நிமிடம் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த பிளாஸ்டிக் பையால் பல 100 வருடங்களுக்கு அந்த பாதிப்பு உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு விலங்குகள் மரணம் அடைகிறது. 14 வகையான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’’ என்றார். முன்னதாக லீலாசாந்தான் குழுவினரின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. மேடை மஞ்சப்பை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. முதல்வர் துவக்கி வைத்தவுடன், பெரிய அளவில் மஞ்சப்பை மேடையில் தோன்றும் வகையில் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. விழாவில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு முதல்வர் மஞ்சப்பை வழங்கினார். மேலும், ரோஜா, செவ்வந்தி சுய உதவி குழுவினருக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வன சரகர்கள், விற்பனையாளர்கள், இந்திய தொழில் கூட்டமைப்பினருக்கு முதல்வர் மஞ்சப்பை வழங்கினார்.* விஜய் சேதுபதி அறிவுரைதமிழக அரசு இன்று அறிமுகப்படுத்திய, மீண்டும் மஞ்சப்பை இயக்கம் சார்பில் வெளியிட்ட குறும்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். அதில் அவர் பேசியபோது, ‘‘சாப்பாட்டில் உப்பு, மசாலா போட்டு சாப்பிடுகிறோம். பிளாஸ்டிக் போட்டு சாப்பிடுவோமா? மனிதர்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடுவதால் விலங்கு, மீன் உயிரிழக்கிறது. மனிதர்கள் செய்யும் தவறு என்னவென்றால், பாவம், இன்னொன்று பிளாஸ்டிக் பயன்படுத்துவது. பாவத்தை புண்ணியம் செய்து சரி செய்யலாம். பிளாஸ்டிக்கை எப்படி சரி செய்வது? இனி வருங்காலங்களில் மஞ்சப்பை பயன்படுத்துவதன் மூலம் சரி செய்யலாம்” என்றார்….

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது