தமிழகத்தில் சட்டம் படித்தவர்களில் வழக்கறிஞரான முதல் திருநங்கை: தமிழ்நாடு பார்கவுன்சில் பாராட்டு

சென்னை: டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் சட்டம் படித்த  முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் வழிவிட்டான். இவரது மகள் கண்மணி (22). திருநங்கையான இவர், புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பை முடித்தார். இதையடுத்து, இவர் தமிழ்நாடு பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்தார். தமிழ்நாட்டில் அரசு சட்ட கல்லூரியில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ள முதல் திருநங்கையான இவருக்கு 2 சகோதாரர்களும், 2 சகோதரிகளும் உள்ளனர். இவரது தாய் சத்துணவு ஊழியர். தந்தை காலமானார். பள்ளிப்படிப்பை முடிக்கும்போது பாலின மாறுபாடு அடைந்து வந்த மகனை ஏற்க குடும்பத்தினர் மறுத்த நிலையில், 2017ம் ஆண்டு 12ம் வகுப்பை முடித்த கண்மணி வீட்டிலிருந்து வெளியேறினார். பின்னர் அதே பகுதியில் உள்ள விடுதியில் தங்கி செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஐந்தாண்டு சட்டப் படிப்பை முடித்தார். இதுகுறித்து கண்மணி கூறும்போது, ‘‘குடும்பத்தினர் ஏற்க மறுத்தாலும் பள்ளி, கல்லூரியில் சக மாணவர்களும், ஆசிரியர்களும், பேராசிரியர்களும் கல்வி கற்க துணை புரிந்தனர். வழக்கறிஞர் ஆனதுடன் நிறுத்தி விடாமல் சிவில் நீதிபதிக்கான தேர்வில் பங்கேற்று வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்கில் வேளச்சேரியில் உள்ள சந்துரு லா அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறேன்’’ என்றார். இவருக்கு வழக்கறிஞருக்கான பதிவு சான்றிதழை பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வழங்கினார். அப்போது சட்ட கல்லூரி முதல்வர் கவுரி ரமேஷ் திருநங்கை கண்மணிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறும்போது, தமிழகத்தில் இதுவரை 3 திருநங்கைகள் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளனர். கண்மணி மட்டும்தான் தமிழ்நாட்டில் படித்தவர். மற்ற இருவர் ஆந்திரா, கர்நாடகாவில் படித்தவர்கள். வரும் காலத்தில் மேலும் பல 3ம் பாலினத்தவர் சட்டம் படிக்க வரவேண்டும் என்று பார் கவுன்சில் எதிர்பார்க்கிறது என்றார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை