தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது; யார் தவறு செய்தாலும் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில்  சட்டத்தின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. அந்த வழக்கு பாயுமோ, இந்த வழக்கு பாயுமோ என்று பயந்து  நடுங்குகிறவர்களுக்கெல்லாம் எங்களால் பாதுகாப்பு தர இயலாது. யார் தவறு செய்தாலும் நிச்சயமாக, உறுதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம்-ஒழுங்கு குறித்து பேச அதிமுகவுக்கு தகுதி இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மழை வெள்ளம் குறித்து பேச அதிமுகவினருக்கு எந்த தகுதியும் இல்லை. எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. ஏனென்றால், 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல், செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்துவிட்டு, சென்னை மாநகரத்தையே மிதக்க விட்டனர்.நூற்றுக்கணக்கானோர் மாண்டனர். சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவதற்காவது அவர்களுக்கு தகுதி இருக்கிறதா? கொடநாடு கொலை. கொள்ளையில் தொடங்கி, பொள்ளாச்சி பாலியல் விவகாரங்கள்,  குட்கா வரை பல்வேறு முத்திரைகளை பதித்தவர்கள்தான் அதிமுகவினர். ‘எங்களது கட்சிக்காரர்களை விசாரணை என்ற பெயரால் அழைத்துச் செல்கிறார்கள்’ என்று பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சி தலைவர் பேசியிருக்கிறார். அது எந்த வழக்கு என்பது தெரியவில்லை. அந்த வழக்கு பாயுமோ, இந்த வழக்கு பாயுமோ என்று பயந்து நடுங்குறவங்களுக்கெல்லாம் எங்களால் பாதுகாப்பு தர இயலாது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. திமுகவை சேர்ந்தவர்களே யாராவது தவறு செய்தால், ஒரு சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலும், நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், அண்ணா மீது ஆணையாக சொல்கிறேன், கலைஞர்மீது ஆணையாகச் சொல்கிறேன், இந்த ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதால்தான் இன்றைக்கு தொழில் வளர்ச்சியில், புதிய முதலீடுகளை நம்மால் ஈர்க்கமுடிகிறது. ஒரகடத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ கருவிகள் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.  நாட்டுக்கே முன்னோடியாக தூத்துக்குடியில் மாபெரும் அறைகலன் பூங்கா 1,100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த இரண்டு பூங்காங்கள் மூலம் மட்டும் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட இருக்கின்றது. 8 மாதங்களில் வெளியிடப்பட்ட 1,641 அறிவிப்புகளில், 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 75 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 24 சதவீத அறிவிப்புகள், அதாவது, 389 அறிவிப்புகளை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன. 1 சதவீத அறிவிப்புகள், அதாவது 14 அறிவிப்புகள் மட்டும் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளன.  இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை