Sunday, June 30, 2024
Home » தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பணிகள் தீவிரம்: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பணிகள் தீவிரம்: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by kannappan

திருப்பூர்: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருப்பூரில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒருபகுதியாக, கூடுதல் தடுப்பூசிகளை வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தார்.  இதையடுத்து, 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் மும்பையில் இருந்தும், 75,000 கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் ஐதராபாத்தில் இருந்தும் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தவிர தமிழகத்துக்கு கோவாக்சின், கோவிஷீல்ட்  தடுப்பூசிகள் தினமும் 1 லட்சம் அளவில் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முதல்வரின் தொடர் நடவடிக்கையே காரணம் என சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.  இதுதவிர, தடுப்பூசிக்கான கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். உலகளாவிய தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். மத்திய அரசு அனுமதி  அளித்ததன்பேரில், தமிழக அரசே நேரடியாக 3.5 கோடி தடுப்பூசியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்தது. இதில் முதல் கட்டமாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. மேலும், அடுத்தடுத்த கட்டங்களில் தடுப்பூசிகள்  வரவுள்ளன. இந்தநிலையில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 20ம் தேதி (நேற்று) காலை திருப்பூரில் தொடங்கி வைப்பார் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நிகழ்ச்சியில்  கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து காலை 9 மணிக்கு சேலம் கமலாபுரம் விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். பின்னர் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு தடுப்பு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார். அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் சென்றார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் உள்ள ‘நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா’ வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், 18 வயதுக்கு  மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர், திருப்பூர் தொழில் துறையினர், முதல்வரை சந்தித்து கொரோனா  நிவாரண நிதி வழங்கினர். ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினர் ரூ.1 கோடி வழங்கினர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.50 லட்சம், திருப்பூர் சாய ஆலைகள் சங்கம், திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சார்பில் ரூ.2.70 கோடி  முதல்வர் நிவாரண நிதிக்கான காசோலையாக வழங்கப்பட்டது. இங்கு மட்டும் மொத்தம் ரூ.32 கோடி வழங்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தொற்று தடுப்புப்பணிகள்  குறித்து முதல்வர் கேட்டறிந்தார். கொடிசியாவில் சிகிச்சை மையம்: இதைத்தொடர்ந்து, பீளமேடு கொடிசியா வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையத்தை டங்கி வைத்து பார்வையிட்டார். இங்கு ஏற்கனவே 1,280 படுக்கைகளுடன் தனி சிகிச்சை மையம் இயங்கி வருகிறது.  தற்போது, கூடுதலாக 820 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சித்தா மருத்துவத்திற்கு 225 படுக்கைகளும் ஆகும். இந்த மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு நோயாளிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, கிராமத்து பால் அமைப்பு சார்பாக வைக்கப்பட்டு இருந்த நாட்டு மாட்டு பால் பானத்தை, முதல்வர் பார்வையிட்டார். முன்னதாக முதுநிலை மருத்துவ மாணவிகள் உதவித்தொகையை அதிகரிக்க  கோரி முதல்வரிடம் மனு அளித்தனர். குமரகுரு கல்லூரி: கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 800 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இங்கு, 2 அரங்குகளில்  அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளை பார்வையிட்டார். அங்கேயே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின், இரவு 7.30 மணியளவில் விமானம் மூலம் மதுரை சென்றார்.  நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், முத்துசாமி, செந்தில் பாலாஜி, சாமிநாதன், சக்கரபாணி, ராமச்சந்திரன், கயல்விழி, கோவை தொகுதி எம்.பி. பி.ஆர்.நடராஜன், திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், கோவை கலெக்டர்  நாகராஜன் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ், டிஐஜி நரேந்திரன்நாயர், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல் ஆகியோர் செய்தனர்.நேற்று இரவு மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து இரவு தங்கினார். இன்று காலை 9.45 மணியளவில் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் வருகிறார். 10 மணி முதல் 10.45 மணி வரை  கொரோனா ஆய்வுப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.  பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, காலை 11 மணியளவில் தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள கோரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதிகாரிகளிடம் ஆலோசனைக்கு பின் கார் மூலம் பகல் 1.30 மணியளவில்  திருச்சி சென்று ஆய்வு பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபடுகிறார். வரவேற்பு பதாகை, பேனர் கொடிகள் எங்கும் இல்லைமுதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக மு.க.ஸ்டாலின் 5 மாவட்ட சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில் அவர் விடுத்திருந்த அறிக்கையில், ‘‘ஒன்றிணைவோம் வா’’ பணிகளில் ஈடுபட்டு, மக்களுக்கு தேவையானவற்றை  நிறைவேற்றித் தர வேண்டும், பயணத்தின்போது, நான் தங்கும் இடங்களில் என்னை சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது. வரவேற்புக் கொடுக்கும் எண்ணத்தில், பயணம் செய்யும் பகுதிகளில் கொடிகளை கட்டுவதையும், பதாகைகள்  வைப்பதையும் தவிர்க்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தி இருந்தார். இதன்படி, நேற்று சேலம், திருப்பூர், கோவை நிகழ்ச்சிகளில் எங்கும் திமுக சார்பில் வரவேற்பு பதாகைகள், பேனர்கள், கொடிகள் ைவக்கப்படவில்லை. முக்கிய சந்திப்பு  பகுதிகளில் மட்டுமே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சேலம் இரும்பாலை, கோவை கொடிசியா பகுதியில் பிரமாண்டமான கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தபோதிலும் அங்கு வாழை  மர தோரணங்கள் கூட வைக்கப்படவில்லை. இது, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றது….

You may also like

Leave a Comment

fifteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi