தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலுமாக தடுப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டுள்ளார். சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய பொறியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர், வாரியத்தின் தலைவர், வாரிய உறுப்பினர் செயலர், தலைமை அலுவலக துறை தலைவர்கள், மாநிலம் முழுவதும் உள்ள இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வு கூட்டத்தின்போது மாநிலம் முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான முக்கிய பிரச்னைகளை கையாளுவது, அவற்றிற்கு தீர்வு காண்பது, ஆறுகள் மற்றும்  நீர்நிலைகள் மாசு அடையாமல் பாதுகாப்பது தொடர்பான அறிவுரைகளை வழங்கி அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தொழில் வளர்ச்சியால் ஏற்படும் நன்மைகளுக்காக சுற்றுச்சூழல் பாதிப்பினை ஏற்றுக்கொள்ள இயலாது. அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகளை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னைநார் தொழிற்சாலைகளால் ஏற்படும் நில, நீர் மற்றும் காற்று மாசினை கட்டுப்படுத்த அவற்றை  முறைப்படுத்த வேண்டும்.     தோல் தொழிற்சாலைகள் மற்றும் சலவை தொழிற்சாலைகளுக்காக அமைக்கப்பட்ட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கமடைந்துள்ள உப்பு கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணிப்பேட்டையில் நீண்ட காலமாக வைக்கப்பட்டுள்ள குரோமியக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றில் ரசாயன கழிவுகளை வெளியேற்றாமல் தடுக்க  தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.    உள்ளாட்சி அமைப்புகளுடன் தொடர் ஆலோசனை நடத்தி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகர பகுதிகளில் காற்று மாசினை கட்டுப்படுத்தி வாழ்வதற்கு உகந்த பகுதிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதலின்படி கோழிப்பண்னைகளை வாரியத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும்.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலுமாக தடுப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக பொதுமக்கள் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்பேட்டைகளில் காற்று மாசினை குறைக்க மண் சார்ந்த நாட்டு மரங்கள் நடுவதற்கு தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும். அபாயகரமான தீங்கு விளைவிக்கும் கழிவுகளை சிமெண்ட் தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்