தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்: சென்னையில் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1.1.2022 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள் இதுவரை தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாவிட்டால் புதிதாக பதிவு செய்யவோ அல்லது நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்வதற்கான விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக நவம்பர் 13, 14, மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று (13ம் தேதி) தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் (பள்ளிகளில்) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பிப்பவர்கள், வசிப்பிட முகவரி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் ஒன்றும் சமர்ப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், சமீபத்திய குடிநீர், தொலைபேசி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு ரசீது, வங்கி, கிஸான், அஞ்சல் அலுவலக சமீபத்திய கணக்கு புத்தகம் ஆகிய ஏதேனும் ஒன்றின் நகலை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம். 
விண்ணப்பதாரர் 25 வயதுக்கு கீழ் இருந்தால் வயது சான்றும் அளிக்க வேண்டும். வயது சான்றாக, பிறப்பு சான்றிதழின் நகல், பள்ளி நிறைவு சான்றிதழின் நகல் ஆகியன சமர்ப்பிக்கலாம். பெயர் சேர்க்க – படிவம் 6, பெயர் நீக்கம் – படிவம் 7 திருத்தம், முகவரி மாற்றம் – படிவம் 8 பாகம், வார்டு மாற்றம் – படிவம் 8ஏ, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெயர் சேர்க்க படிவம் 6ஏ ஆகிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்நிலையில்,  சென்னை மாநகராட்சியில் மட்டும் மழையின் காரணமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு