தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அனைத்து பள்ளிகளையும் மூட தமிழக அரசு உத்தரவு..!!

சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அங்கீகார சான்றிதழ் இல்லாமல் எந்த பள்ளியும் செயல்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி எந்த பள்ளியும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படக்கூடாது என்ற விதி உள்ளது. அதனை சுட்டிக்காட்டி தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று முக்கிய அறிவிப்பானது தொடங்க கல்வி இயக்குனர் சார்ந்து வெளியிடப்பட்டிருக்கிறது. 
அதன்படி தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அனைத்து இளம் மழலையர் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூடுவது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட கல்வி, முதன்மை கல்வி அலுவலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. சுயநிதி தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
கடந்த ஆண்டில் இருந்து பல பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தது. மேலும் அரசு சார்பில், தனியார் பள்ளிகள் அவர்களின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக அவர்கள் ஆன்லைன் வகுப்பு நடத்தி வருவதால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், எனவே கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. 
இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட முதன்மை  கல்வி அலுவலர் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்தந்த பள்ளிகள் தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்தன? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக 20ம் தேதிக்குள் ஒரு விரிவான அறிக்கையை பள்ளிக்கல்வித்துறைக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது. 
துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டால் வட்டார கல்வி அலுவலர், மாவட்ட, முதன்மை கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை