தப்பியோடிய 3 பேரை பிடிக்க 2 தனிப்படை போலீசார் தீவிரம் பிறந்த நாள் விழாவில் வாலிபர் கொலை வழக்கு

வேலூர், ஜூன் 12: வேலூரில் பிறந்தநாள் விழாவில் வாலிபர் கொலை வழக்கில் தப்பியோடிய 3 பேரை பிடிக்க 2 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் வசந்தபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(25). இவர் மீது வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பைக்குகள், செல்போன் திருட்டு குற்றவழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு நேரு நகரில் ஜெயபிரகாசின் நண்பன் பிறந்தநாள் விழா நடந்தது. அதில் ஜெயபிரகாஷ் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் ஐய்யப்பன், வசந்த், தனுஷ், சக்தி மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.

பிறந்தநாள் விழாவில் அனைவரும் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடிபோதையில் ஜெயபிரகாசிற்கும் அதே பகுதியை சேர்ந்த வசந்த், தனுஷ், சக்தி தரப்பினருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வசந்த், தனுஷ் தரப்பினர் பீர்பாட்டில் மற்றும் அங்கு கிடந்த ஹாலோபிளாக் கற்கள் கொண்டு ஜெயபிரகாசை சரமாரியாக தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் தாக்கி உள்ளனர். அதனை தடுத்த ஐய்யப்பனையும் அந்த கும்பல் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடியது.

இதில் படுகாயமடைந்த ஜெயபிரகாஷ், ஐய்யப்பனை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக இருவரையும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நேற்று காலை 11 மணியளவில் ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஐய்யப்பனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வசந்த், தனுஷ், சக்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அய்யனார், அருண்பாண்டியன், வேலு ஆகிய 3 பேரை பிடிக்க 2 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்