தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை குறைபாடுடன் வாகனத்தை ஓட்டினால் உரிமம் ரத்து-அதிகாரிகள் எச்சரிக்கை

பொள்ளாச்சி : விடுமுறை முடிந்து வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால், நேற்று பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து சார்பில்,  தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறைபாடுடன் உள்ள பழைய வாகனத்தை இயக்கினால் உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும், என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் வரும் 13ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தியுள்ளது. விரைவில் பள்ளி திறக்கப்பட உள்ளதையடுத்து,  தனியார் வேன் மற்றும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? அதில் அனைத்து வசதிகளும் உள்ளதா? என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி வட்டார போக்குவரத்துக்குட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளிகளில் மாணவர்கள் வசதிக்காக இயக்கப்படும் சுமார் 275க்கும் மேற்பட்ட வேன் மற்றும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்று பாலக்காடு ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு வாகனங்களை, சப்-கலெக்டர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி வாகனத்தை இயக்க, டிரைவர் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளாரா? குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவரா? என்பதை குறித்து கேட்டறிந்தனர்.பஸ்சில் இருக்கை, மேல்பலகை உள்ளிட்டவை உறுதியாக உள்ளதா? வேகக்கட்டுப்பாடு கருவி உள்ளதா? அவசரகால வழி உள்ளதா? முதலுதவி சிகிச்சை பெட்டி உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். பழைய வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதற்கான அத்தாச்சி சான்று பெற்று அதன் பிறகே மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறுகையில்,‘‘கோடை விடுமுறை முடிந்து வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளன. இதில் தனியார் பள்ளிள் மூலம் மாணவர்கள் வசதிக்காக இயக்கப்படும் வாகனங்களில் அவசர கதவு உள்ளதா? பழுதாகியுள்ளதா? என்று சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சிறிய குறைபாடுகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வட்டாரபோக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனத்தை கொண்டுவருமாறு சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. வாகனங்கள் சீராக உள்ளதா? என்று பரிசோதிக்கப்படும், அதன்பிறகே வாகனத்தை இயக்க அனுமதிப்போம். குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கினால் வாகன உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்….

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜ கூட்டணியை தோற்கடித்து சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஆன்லைன் ரம்மி விசைத்தறி அதிபர் தற்கொலை

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு: கரூரில் சிபிசிஐடி அதிரடி