தனியாக சுற்றும் ஒற்றை யானை கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் : ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் ஒற்றை யானை ஆக்ரோஷமாக சுற்றித்திரிவதால், கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு, சுற்றியுள்ள கிராமங்களில் நுழைந்து பயிர்களை துவம்சம் செய்து வந்தன. கடந்த சில தினங்களுக்கு முன், அனைத்து யானைகளையும் தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். தற்போது, 3 யானைகள் மட்டுமே உள்ளன.இதில், ஒரு யானை மட்டும், சானமாவு வனப்பகுதி அருகே உள்ள கிராம பகுதியில் சுற்றி வருகிறது. மேலும், திருச்சிப்பள்ளி, அம்பலட்டி, டி.கொத்தப்பள்ளி, சானமாவு, ராமாபுரம் மற்றும் ஆலியாளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்துவதோடு, விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம், திருச்சிப்பள்ளியை சேர்ந்த விவசாயி, யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராம பகுதிக்கு வரும் ஒற்றை யானை, ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது. காலை 10 மணி  ஆனாலும் வனப்பகுதிக்கு செல்லாமல், கிராம பகுதியிலேயே சுற்றி வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ள இந்த யானையை, வனத்துறையினர் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்,’ என்றனர்.இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, ‘ஓசூர் வனப்பகுதியில் உள்ள 3 யானைகளில், ஒரு யானை மட்டும் தனியாக சுற்றுவதால், விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், கிராம பகுதிகளுக்கு யானைகள் வரும்போது வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வனப்பகுதிக்கு கால்நடைகள் மேய்ச்சலுக்காக கொண்டு செல்லும்போதும், விறகு பொறுக்குவதற்காக செல்லும்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,’ என்றனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்