தனிநபருக்கு சொந்தமான 10.72 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி ஆகஸ்ட் மாதத்துக்குள் வேலூர் விமான நிலைய பணிகளை முடிக்க நடவடிக்கை: எம்பி, எம்எல்ஏவுடன் ஆய்வு செய்த கலெக்டர் தகவல்

வேலூர்: வேலூர் விமான நிலையத்திற்கு தேவையான தனி நபருக்கு சொந்தமான 10.72 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வருகிற ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விமான நிலைய பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து, 51 ஏக்கர் பரப்பில் விமான ஓடுதளம் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு பிறகு சிறிது காலம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இந்த வானூர்தி தடம், கடந்த 2006ம் ஆண்டு ‘மதராசு பிளையிங் கிளப்பின்’ பயிற்சி விமானிகளுக்காக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அடுத்த 5 ஆண்டுகள் மதராசு பிளையிங் கிளப் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வானூர்தி தடம், 2011ம் ஆண்டில் பயன்பாடு ஏதும் இல்லாமல் மீண்டும் கைவிடப்பட்டது.இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு, மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் அப்துல்லாபுரத்தில் இருக்கும் வானூர்தி தடத்தை, 20 பயணிகள் வரை அமர்ந்து பயணம் செய்யக்கூடிய சிறிய வகை விமானங்களுக்கான, விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக, பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் ₹60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. வேலூர் விமான நிலையத்திற்கு தேவையாக உள்ள தனியார் நிலத்தை கைப்படுத்துவதில் இழுபறி நீடிப்பதால், விமான நிலைய பணிகள் முழுமை பெறவில்லை. இந்நிலையில் தனியார் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்பி கதிர்ஆனந்த், எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.இதுதொடர்பாக கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களை பெறுவதில் கடந்த 7 மாதங்களாக பிரச்னை நீடிக்கிறது. இதனை தீர்ப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வரும் 6ம் தேதி தொழில்துறை செயலாளருடன் கூட்டம் நடைபெற உள்ளது. அளவீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட தனியார் நிலம், விமான நிலையத்திற்கு தேவை என்பதை எடுத்துரைத்து அதனை பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விமான நிலையத்திற்கு உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க உத்தரவிட்டுள்ளேன். விமான நிலைய எல்லைக்குள் வரும் சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்றி அதற்கான தனி வழித்தடம் அமைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம். விமான நிலைய எல்லைக்குள் 4 மின்கம்பங்கள் வருகிறது. அவற்றை மாற்று இடத்தில் வைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் அங்குள்ள விடுதியை இடித்து அகற்றப்படும்.தற்போது 97 ஏக்கரில் விமான நிலையத்திற்கான இடம் உள்ளது. இன்னும் தனிநபருக்கு சொந்தமான 10.72 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. விமான நிலையப்பணிகளை ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளோம். தற்போது 80 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அதிகாரிகளுடன் விமான நிலையத்திற்குள் சென்று ஆய்வு செய்து, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது டிஆர்ஓ ராமமூர்த்தி, ஆர்டிஓ பூங்கொடி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சரவணன், விமான நிலைய அதிகாரி சுருதி, தாசில்தார்கள் செந்தில், பூமா, உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். …

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!