தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

கரூர், அக். 21: கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வட்டார வாரியாக அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் தங்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யூடிஐடி) வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மகளிர் திட்ட பணியாளர்களை கொண்டு சமூக தரவு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஏ,பி மற்றும் சி என மூன்று வகையாக பிரிக்கப்ட்டு 12,244 மாற்றுத்திறனாளிகள் என சமூக தரவு கணக்கெடுப்பட்டது.

இதில், ஏ வகை மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளவர்கள் மற்றும் அவர்களது விபரங்கள் அலுவலகத்தில் தரவு தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள பி வகை மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளவர்கள் மற்றும் அவர்களது முழுமையான தகவல்கள் அலுவலகத்தில் தரவு தளத்தில் சேமிக்கப்படவில்லை. சி வகை மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் இன்றி புதிய மாற்றுத்திறனாளிகளாக கணக்கெடுப்பாளர்களால் கண்டறியப்பட்டவர்கள், இந்த சி வகையில் கரூர் மாவட்டத்தில் 922 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

அதன்படி சி வகை மாற்றுத்திறனாளிகள் 922 நபர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் வட்டார வாரியாக அக்டோபர் 22 மற்றும் 23ம்தேதி ஆகிய இரண்டு நாட்கள் புகழூர் அரசு மருத்துவமனையிலும், அக்டோபர் 24 மற்றும் 25ம்தேதி ஆகிய இரண்டு நாட்கள் கோவக்குளம் அரசு மருத்துவமனையிலும், அக்டோபர் 26 மற்றும் 29ம்தேதி ஆகிய இரண்டு நாட்கள் மைலம்பட்டி அரசு மருத்துவமனையிலும், நவம்பர் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் குளித்தலை அரசு மருத்துவமனையிலும், 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் கரூர் அரசு மருத்துவமனையிலும், நவம்பர் 13ம்தேதி அன்று பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையிலும், 14ம்தேதி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், 15ம்தேதி மண்மஙகலம் அரசு மருத்துவமனையிலும் நடைபெறவுள்ளது.

இதுநாள்வரை தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத புதிய மாற்றுத்திறனாளிகளாக கணக்கெடுப்பாளர்களால் கண்டறியப்பட்டவர்களும் மற்றும் கண்டறியப்படாதவர்களும் கலந்து கொண்டு மருத்துவ சான்று பெற்று தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு உரிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை (நகல், அசல்) பாஸ்போர்ட் சைஸ் 4 ஆகியவற்றுடன் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி