தனது சொந்த அடையாளத்தை மறுப்பவர்கள் எதையும் ஏற்றுக்கொள்ளும் குப்பை தொட்டி போன்றவர்கள் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோதங்கராஜ் பதிலடி

நாகர்கோவில், அக்.27: தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி இருந்த காலகட்டத்தில் அப்போது ஆளுநராக இருந்த சென்னாரெட்டி மீது அதிமுகவினரே முட்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தை எடப்பாடி பழனிசாமிக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை உடனே போலீஸ் கைது செய்துள்ளது. அதன் பின்னர் பேசுவது அர்த்தம் இல்லாத பேச்சு. அண்ணாமலை எப்போதும் மாற்றி மாற்றி பேசக்கூடியவர். காலையில் நான் திராவிடன் என்று கூறுகிறார், மதியம் திராவிடம் என்பது குப்பைத்தொட்டி என்று கூறுகிறார். அதனால்தான் நாங்கள் திரும்ப திரும்ப கூறுகிறோம், ஒரு மனிதனுக்கு மொழி என்பது தாயை போன்றது, இனம் என்பது தந்தையை போன்றது, மொழியும், இனமும் ஒரு மனிதனின் அடையாளம்.

தனது சொந்த அடையாளத்தை மறுக்க கூடியவர்கள் எதையும் ஏற்றுக்கொள்ளும் குப்பை தொட்டி போன்றவர்கள். திராவிடம் பேசுபவர்களை குப்பை தொட்டி என்று கூறுவது கண்டனத்திற்குரிய ஒன்று. தொட்டிலை ஆட்டுவதும் அவர்கள்தான், பிள்ளையை கிள்ளுவதும் அவர்கள்தான் என்று மக்களுக்கு தெரியும். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு பின்னணியில் கூட இவர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இவர்கள்தான் இன்றைக்கு சமய ஒற்றுமையை சீர்குலைக்க சிறுபான்மை மக்கள் என்ற லேபிளில் கூட சில ஆட்களை களத்தில் இறக்கிவிட்டிருப்பதாக பேசப்படுகிறது. இவை தேர்தல் நெருங்க நெருங்க நிறைய அரங்கேறிக்கொண்டு இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை