தத்தமஞ்சி நீர்த்தேக்கத்துக்கு கால்வாய் அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு: பொக்லைன் இயந்திரம் சிறைபிடித்து ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டூர்-தத்தமஞ்சி நீர்த்தேக்கத்துக்கு ரூ.90 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதையடுத்து, நேற்று அப்பகுதியில் பொக்லையன் இயந்திரத்தை சிறைபிடித்து மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், காட்டூர்-தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளுக்காக, ஆரணி ஆற்றில் லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து குமரசிரளப்பாக்கம் ஏரி வழியாக சுமார் 8 கிமீ தூரம் வரை கால்வாய் மூலம் உபரிநீரை கொண்டு செல்ல, ரூ.90 லட்சம் மதிப்பில் இருபுறங்களிலும் பொக்லைன் இயந்திரம் மூலம் கரைகள் அமைக்கும் பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு மழைநீர் வடிந்து செல்ல வடிகால்வாய் கரைகளை சீராக அமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் போதிய நீரின்றி பாதிக்கப்படும். கனமழை காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, வடிகால்வாய் கரைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்ட 2 பொக்லைன் இயந்திரங்களை நேற்று 100-க்கும் மேற்பட்ட வேலூர் கிராம மக்கள் சிறைப்பிடித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆரணி வடிநிலக் கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயகுமாரி, உதவி செயற்பொறியாளர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு வடிகால்வாய் கரைகள் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி