தண்ணீரில் சிக்கிய மாநகர பஸ்

பெரம்பூர்: வியாசர்பாடி ஜீவா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்ததால், மாநகர பஸ் சிக்கியது. 30க்கும் மேற்பட்ட பயணிகளை தீயணைப்பு வீரர்கள்  பத்திரமாக மீட்டனர். வடசென்னை பகுதிக்கு வியாசர்பாடி, கணேசபுரம், ஜீவா மேம்பாலம் கீழ் பகுதியில் நேற்று மதியம் மணலி பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு 64சி மாநகர பஸ் பாரிமுனை நோக்கி சென்று கொண்டிருந்தது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அதிக தண்ணீர் தேங்கியதால் தண்ணீரில் பஸ் சிக்கி அதே இடத்தில் நின்றது. இதனால் பஸ்சில் இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மழை பெய்து கொண்டிருந்ததால் சிறிது, சிறிதாக தண்ணீர் அதிகரிக்க ஆரம்பித்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போக்குவரத்து உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம், உதவி ஆய்வாளர்கள் காசி விசுவநாதன், பாலமணி உள்ளிட்டோர் பயணிகளை மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து, வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கயிறு மற்றும் படகுகள் மூலம் பயணிகளை மீட்டனர். சிலர் தாங்களாகவே பேருந்தில் இருந்து இறங்கி வெளியேறினர். சுமார் அரை மணி நேரத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகளை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அதன் பிறகு ஜாக்கி பொருத்திய கனரக வாகனம் வரவழைக்கப்பட்டு பஸ் பத்திரமாக மீட்கப்பட்டது. இதன் காரணமாக, ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்