தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை

தண்டையார்பேட்டை, அக்.5: பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர், தண்டையார்பேட்டை வினோபா நகரில் தங்கி இருப்பதாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தண்டையார்பேட்டை வினோபா நகர் 11வது தெருவில் வசித்து வந்த சேட்டு (எ) அப்துல் ரஹீம் (32) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தடை செய்யப்பட்ட ஹிஸ் புத்தஹீர் என்ற அமைப்புடன் இவர் தொடர்பில் இருப்பதும், மேலும், அப்பகுதியில் இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து, தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக சேர்க்க முயற்சி செய்து வந்ததும் தெரிந்தது. அதுமட்டுமின்றி, இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கவும், அரசுக்கு எதிராக சட்ட விரோத செயல்களை தூண்டும் வகையிலும் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

குறிப்பாக, இங்குள்ள ஒரு மசூதியில் இமாமாக இருந்து கொண்டு பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பேசி வந்துள்ளார். அதனால் மசூதி நிர்வாகம் இவரை அங்கிருந்து நீக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைத்து, அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அவரது வீட்டில் சோதனை செய்தபோது கிலாபத் ஆட்சியை இஸ்லாமிய ஆட்சியை உலகம் முழுவதும் கொண்டு வரவேண்டும் என்பது தொடர்பான குறிப்புகள் மற்றும் ஐரோப்பாவின் மார்க்கம் ஆகிய பல்வேறு புத்தகங்கள், கத்தி, செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. பின்னர், இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்