தடை முடிந்து கடலுக்கு சென்ற முதல் நாளில் அதிகளவு இறால் மீன்பாட்டால் ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம் : பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடித்து திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளில் இறால் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மீன்பிடி தடைகாலம் முடிந்து 75 நாட்களுக்குப்பின் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் இரவு முழுவதும் மீன்பிடித்து நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர். கரை வந்து சேர்ந்த சிறிய மற்றும் பெரிய படகுகளில் 300 கிலோ முதல் 500 கிலோ வரை இறால் மீன் வரத்து இருந்தது. கடல் நண்டு, கனவாய் மீன்களும் வழக்கத்தைவிட அதிகளவில் சிக்கியிருந்தது.பிடித்து வந்த மீன்களை தரம் வாரியாக பிரித்தெடுத்த மீனவர்கள் கூடைகளில் சேகரித்து கரைக்கு கொண்டு வந்தனர். நீண்ட நாட்களுக்குப்பின் கடலுக்கு சென்ற நிலையில் எதிர்பார்த்தது போல் அதிகளவில் மீன்பாடு இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீனவர்கள் கரை திரும்பியதால் நேற்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இறால் மீன்களுக்கு தரத்திற்கு தகுந்தாற்போல் விலையை நிர்ணயம் செய்ய ஏற்றுதியாளர்கள் முன்வர வேண்டும் என படகு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், ‘‘மீன்பிடி தடை காலம் முடிந்தப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் கடலுக்கு சென்று கரை திரும்பும் போது படகு ஒன்றிற்கு குறைந்தபட்சம் 20 முதல் 50 கிலோ வரை இறால் கொண்டு வருகிறோம். இதனால் டன் கணக்கில் குவிந்த இறால் மீன்களை கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயமின்றி கொள்முதல் செய்தன. வழக்கத்தை விட இறால் பருமன் கிலோவுக்கு 22 முதல் 27 எண்ணிக்கை உள்ளது. இதனால் 27 எண்ணிக்கை உள்ள இறாலுக்கு கிலோ ரூ.600 என நியாயமான விலையை ஏற்றுமதி நிறுவனங்கள் நிர்ணயிக்க வேண்டும். டீசல் விலை லிட்டர் ரூ.100ஐ எட்டுவதால், இறால் கிலோ ரூ.600 கொள்முதல் செய்தால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து படகு உரிமையாளர்கள் விடுபட முடியும்’’ என்றனர்.மூழ்கிய படகுராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மீனவர் டேனியலுக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மீன்பிடித்த போது இரவில் தனுஷ்கோடி கடல் பகுதியில் படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் அருகே மீன்பிடித்தவர்களின் படகில் ஏறி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். படகு கடலில் மூழ்கியது குறித்து மீன்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்….

Related posts

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்