தடை பிறப்பித்த தனியார் நிலத்தில் சாலை அமைத்த செயல் சட்டப்படியானது அல்ல: கலெக்டர் ஆஜராக உத்தரவு

 

மதுரை, நவ. 11: தடை விதிக்கப்பட்ட நிலத்தில் சாலை அமைத்த அதிகாரிகளின் செயல் சட்டப்படியானது அல்ல எனக்கூறியுள்ள ஐகோர்ட் கிளை, கலெக்டர் அறிக்கையுடன் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரைச் சேர்ந்த பழனிச்சாமி மற்றும் அவரது வாரிசுதாரர்கள் தரப்பில், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்களுக்கு சொந்தமான நிலத்தை சட்டப்படி ஆர்ஜிதம் செய்யாமல் சாலை அமைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

எங்களது நிலம் தொடர்பான வழக்கு பேரையூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த நிலத்தில் அரசு தரப்பில் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், பேரையூர் தாசில்தார் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதன்பிறகு உசிலம்பட்டி ஆர்டிஓ ஆஜராக உத்தரவானது. ஆனால், அதிகாரிகள் ஆஜராகவில்லை. ஆனால், மனுதாரர்களின் நிலத்தில் அத்துமீறி, நுழைந்து சாலை அமைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயல் சட்டப்படியானது அல்ல. எனவே, இந்த விவகாரம் குறித்து மதுரை கலெக்டர் விசாரித்து அதுதொடர்பான அறிக்கையுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நவ.23க்கு தள்ளி வைத்தார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி