தஞ்சை மாவட்டம் பூதலூரில் வெண்ணாற்று பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் லாரி பாய்ந்தது-ஒருவர் பலி 5 பேர் காயம்

வல்லம் : திருச்சியிலிருந்து ஆஸ்பெஸ்டாஸ் ஏற்றி சென்ற மினி லாரி பூதலூர் என்ற இடத்தில் வெண்ணாற்று பாலத்தில் சென்றபோது டிராக்டர் உரசியதில் சுவரை உடைத்து ஆற்றுக்குள் தலைப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் அடியில் சிக்கி ஒருவர் பலியானார். டிரைவர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு திருச்சி நாகமங்கலத்தில் இருந்து நேற்று அதிகாலை ஆஸ்பெஸ்டாஸ் சீட் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று பூதலூர் வழியாக வந்தது. மினி லாரியில் 6 பேர் இருந்தனர். அதிகாலை 2.30 மணிக்கு, பூதலூருக்கும் விண்ணமங்கலத்திற்கு இடையே உள்ள வெண்ணாற்று பாலத்தை மினி லாரி கடக்க முயன்றது. அப்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று, பாலத்தின் கைப்பிடி சுவற்றில் மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் லாரி மீது உரசி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் லாரி நிலைதடுமாறி, வெண்ணாறு பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு, ஆற்றின் உள்ளே பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. லாரி விழுந்த பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்ததால் மினி லாரி பாதியளவு மூழ்கியது.தகவலறிந்த பூதலூர் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சுரேஷ், அன்புச்செல்வம், பிரசாத், தனுஷ், ஆரோக்கிய சந்தனகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.இந்த விபத்தில் லாரி டிரைவர் காட்டூர் பகுதியைச் சேர்ந்த மொய்தீன்கான் (50), திருச்சி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகன் சக்திவேல் (21), அதே பகுதியைச் சேர்ந்த காஜாமைதீன் மகன் நிசாய் அகமத்துல்லா (20), ஜெயசீலன் மகன் அசோக் (35 ), மனோகர் மகன் கருப்புசாமி (29) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். லாரியில் வந்த திருச்சி பெரியார் நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் கார்த்திக் (35) என்பவரை மட்டும் காணவில்லை. பின்னர் காயமடைந்தவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு மினி லாரியை புரட்டி போட்டனர். அப்போது லாரியின் அடியில் சிக்கி கார்த்திக் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்