தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் பள்ளம்: வாகனஓட்டிகள் அவதி

 

தஞ்சாவூர், ஏப்.26:தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் அருகில் ரெட்டிப்பாளையம் செல்லும் சாலையில் ஒரு பகுதியில் பெரிய அளவிலான பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டுனர்கள் வெகுவாக அவதியடைந்து வருகின்றனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் ஈஸ்வரி நகர் அமைந்துள்ளது. இங்கிருந்து ரெட்டிப்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக களிமேடு, ராமநாதபுரம், கரம்பை, ஆலக்குடி, பூதலூர் செல்லும் இரு சக்கர வாகனங்கள், கார்கள், மினி பஸ், லாரி, சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் என்று தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலைப் பகுதியில் ஏராளமாக குடியிருப்புகளும், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் போன்றவையும் அமைந்துள்ளது. இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும் சாலையாக உள்ளது. இந்த சாலையில் ஒரு பகுதியில் சாலையில் நடுவில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அகலமான இந்த சாலை ஒற்றையடி பாதைபோல் காணப்படுகிறது. இரவு நேரத்தில் எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் மிகவும் தடுமாற்றம் ஏற்பட்டு விபத்துக்கள் நிகழும் வாய்ப்புகளும் உள்ளது.

லாரி போன்ற வாகனங்கள் வந்தால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழும் நிலை காணப்படுகிறது. இந்த சாலையில் பல இடங்களில் பாதாள சாக்கடைக்காக குழாய்கள் அமைக்கப்பட்ட இடங்கள் பெரும் பள்ளங்களாக உள்ளது. இதிலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே இந்த ரெட்டிப்பாளையம் சாலையை முழுமையாக சீர் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

திருச்சுழியில் பேக்கரிக்குள் புகுந்த நல்லபாம்பு: தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

விருதுநகர் அருகே மாதச்சீட்டு நடத்தி மோசடி: தனியார் நிதி நிறுவனம் மீது புகார்

காரியாபட்டியில் சேதமடைந்த சந்தைப்பேட்டை வணிக வளாக கடைகள்: பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு