தஞ்சாவூர் காமராஜர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் பெரிய வெங்காயம், தக்காளி விலை அதிகரிப்பு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

தஞ்சாவூர், செப். 27: தஞ்சாவூர் காமராஜர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் பெரிய வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலையும் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவை உள்ளது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேஷம், கர்நாடக போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பல்லாரி இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது பெய்த மழையால் பல்லாரி, சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு வரத்து குறைவினால் சின்ன வெங்காயம், பல்லாரி விலை ஏறுமுகமாக இருந்து வந்தது.

இதனால் பல்லாரி கிலோ ரூ.50 லிருந்து ரூ.70வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தக்காளியும் கிலோ ரூ.40 லிருந்து 50 ரூபாய் வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வெங்காய வியாபாரி கூறியதாவது, வழக்கமாக நாள் தோறும் கர்நாடகம், மகாராஷ்டிரா உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து 120 டன் பல்லாரி வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். தற்போது அங்கு மழை பெய்ததால் வரத்து குறைந்து உள்ளது. இதனால் 100 டன் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் பல்லாரி வெங்காயம் ரகம் வாரியாக கிலோ ரூ.50-லிருந்து ரூ.70- வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-லிருந்து ரூ.70 வரை விற்கப்படுகிறது. வெங்காயத்தின் விலையை தொடர்ந்து தக்காளி விலையும் கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே உள்ளது. தக்காளி கிலோ ரூ.40 லிருந்து ரூ.50 வரை விற்கப்படுகிறது என்றார்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது