தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை காசுகளை கொடுத்து வியாபாரியிடம் ரூ30 லட்சம் பறிப்பு: ஆசைப்பட்டார்… பறிகொடுத்தார்

பெரம்பூர்: தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை காசுகளை வாங்கி 30 லட்ச ரூபாயை பறிகொடுத்த வியாபாரி, போலீசில் புகார்  கொடுத்துள்ளார். சென்னை சவுகார்பேட்டை தங்கசாலை பகுதியை சேர்ந்தவர் ஜித்மல். இவரின் மகன் சுரேஷ் (46). இவர்கள் இருவரும் காசி செட்டி தெருவில் பேக் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகின்றனர். கடந்த 7 நாட்களுக்கு முன் ஜித்மலுக்கு அறிமுகமான ஒருவர் வந்து, ஒரு கிராம் எடையுள்ள 4 தங்க காசுகளை கொடுத்து 10 ஆயிரம் ரூபாய் வாங்கிச்சென்று உள்ளார். இதன்பிறகு கடந்த 3 நாட்களுக்கு பிறகு அதே நபர் மீண்டும் வந்து ஜித்மலின் மகன் சுரேஷிடம் 4 கிலோ தங்க காசுகள் இருப்பதாகவும் அதனை பெற்றுக்கொண்டு 90 லட்சம் கொடுங்கள் மீதி பணத்தை பின்னர் கணக்கு பார்த்து வாங்கி கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு சுரேஷ், ‘’தற்போது என்னிடம் அவ்வளவு பணம் இல்லை’’என்று கூறி அனுப்பிவிட்டார்.இந்த நிலையில், நேற்று மதியம் அந்த நபர் மீண்டும் சுரேஷை தொடர்புகொண்டு தங்க காசுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதற்கு சுரேஷ், ‘தன்னிடம் 30 லட்சம் ரூபாய்தான் உள்ளது’ என்று தெரிவித்தபோது அந்த நபர், ‘’ பரவாயில்லை. உங்களிடம் இருக்கும் பணத்துடன் அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள தாதாவாடி டிரஸ்ட் அருகே வாருங்கள். பணத்தை பெற்றுக்கொண்டு தங்க காசுகளை தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இதன்படி சுரேஷ் பணத்துடன் சம்பவ இடத்துக்கு சென்று கொடுத்துவிட்டு தங்க காசுகளை வாங்கி சென்றுள்ளார். இதன்பிறகு அந்த தங்க காசுகளை பரிசோதனை செய்தபோது அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை காசுகள் என்று தெரிந்ததும் சுரேஷ் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த நபரின் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இதுபற்றி ஓட்டேரி போலீசில் சுரேஷ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் நூதனமுறையில் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். தங்க மூலாம் பூசப்பட்ட பித்தளை காசுகளை வாங்கி 30 லட்ச ரூபாயை வியாபாரி பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது