தங்கை முறை உள்ள பெண்ணை காதல் திருமணம் செய்த வாலிபர் கடத்தி வெட்டிக் கொலை: ஆற்றங்கரையில் சடலம் மீட்பு; உறவினர்கள் போராட்டம்

திருத்தணி: தங்கை முறை உள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி அடுத்த தாடூர் காலனியை சேர்ந்தவர் அன்புராஜ். இவரது மகன் ராசுகுட்டி(25). ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றினார். இவரும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த உறவுக்கார பெண் கீர்த்தனா(22) ஆகியோரும் காதலித்துள்ளனர். அந்த பெண் ராசுகுட்டிக்கு தங்கை முறை என்பதால் இதற்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் அதை மீறி இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் உறவினர்கள் அவர்களை  பிரித்துவிட்டதால் இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.இதற்கிடையில், கடந்த வாரம் ராசுகுட்டி, திருத்தணி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத்திடம் கொடுத்த புகாரில், `நான் காதலித்து திருமணம் செய்த உறவுக்கார பெண் கீர்த்தனாவை தன்னிடம் சேர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், திருத்தணி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், ராசுகுட்டி, அவரது பெற்றோர் மற்றும் பெண்ணின் உறவினர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது பெண் வீட்டில் இருந்து யாரும் காவல் நிலையத்துக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதனால் விசாரணையை ஒத்திவைத்தனர்.இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து பைக்கில் கிளம்பிய ராசுகுட்டி பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரது செல்போன் நம்பருக்கு பெற்றோர் தொடர்புகொண்டபோது ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் மேலும் திடுக்கிட்ட அவர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி போலீஸ் எஸ்பி வருண்குமாரிடம் புகார் கொடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அவரை பல இடங்களில் தேடினர்.இந்நிலையில், பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி ஆற்றின் கரையில் உள்ள செங்காத்தாகுளம் பகுதியில் ராசுகுட்டி வெட்டுக்காயங்களுடன் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையில், இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என கூறி திருத்தணி டிஎஸ்பி அலுவலகம் முன்பு ராசுக்குட்டியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், திருத்தணி பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், சம்மந்தபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்பட்டது….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்