தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் 2 நாளில் சவரனுக்கு ரூ.752 அதிகரிப்பு: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி; இன்னும் விலை உயர வாய்ப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.288 அதிகரித்தது. தொடர்ச்சியாக 2 நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.752 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வந்த சமயத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. விசேஷ தினத்தில் விலை அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த 2ம் தேதி தங்கம் சவரன் ரூ.36,024க்கு விற்கப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான 3ம் தேதி, யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.34 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,469க்கும், சவரனுக்கு ரூ.272 குறைந்து ஒரு சவரன் ரூ.35,752க்கும் விற்கப்பட்டது. தீபாவளி பண்டிகையான 4ம் தேதியும் தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு ரூ.22 குறைந்து ஒரு கிராம் ரூ.4,447க்கும், சவரனுக்கு ரூ.176 குறைந்து ஒரு சவரன் ரூ.35,576க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக, 2 நாட்களில் சவரன் ரூ.448 அளவுக்கு குறைந்தது. இந்த விலை குறைவு தீபாவளிக்கு கடைசி கட்ட நேரத்தில் நகை வாங்க நினைத்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த மகிழ்ச்சியை நகை பிரியர்கள் அனுபவிப்பதற்குள் தீபாவளி முடிந்த மறுநாளே (5ம் தேதி) தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.58 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,505க்கும், சவரனுக்கு ரூ.464 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,040க்கும் விற்கப்பட்டது. மீண்டும் தங்கம் விலை சவரன் ரூ.36,000ஐ தாண்டியது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.36 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,541க்கும், சவரனுக்கு ரூ.288 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,328க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக2நாட்களில் மட்டும் சவரன் ரூ.752 அதிகரித்துள்ளது.தங்கம் தொடர்ச்சியாக விலை அதிகரித்து வருவது நகை வாங்குவோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் இன்னும் விலை அதிகரிக்க தான் வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ‘‘தொடர்ந்து உலக வர்த்தகம் சிறப்பாக இருந்து வருகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதனால், முதலீட்டாளர்கள் பெருமளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதன் தாக்கம் உலக சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் ஏற்றமாக தான் இருக்கும். சில நேரத்தில் குறைந்தாலும் மீண்டும் அதே வேகத்தில் அதிகரிக்கதான் வாய்ப்புள்ளது” என்றார்.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய(சனிக்கிழமை) விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும் என்றார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை