தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ3.64 கோடியில் புதிய கட்டிடம்: முதலமைச்சர் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்

தக்கலை, ஜூலை 30: தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தக்கலை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக நேற்று தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்ததைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா, புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டுக்குட்பட்ட அனைத்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும்பொருட்டும், தமிழ்நாட்டிற்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில் தொகுத்து ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் 2021-2022 திட்டத்தின் கீழ் தக்கலை ஊராட்சி ஒன்றிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3.64 கோடி மதிப்பில் கடந்த ஜனவரி 2023ம் ஆண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது இப்பணிகள் முடிவுற்று, அனைத்து தரப்பட்டவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தக்கலை ஊராட்சி ஒன்றிய புதிய கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து, பெருமை சேர்ந்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சருக்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும், தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்எல்ஏ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹிம், தக்கலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அருள் ஆன்டனி வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பிரேமலதா நன்றி கூறினார். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் ஜெகநாதன் (திருவட்டார்), அழகேசன் (அகஸ்தீஸ்வரம்), ஐயப்பன் (ராஜாக்கமங்கலம்), அனுஷா தேவி (குருந்தன்கோடு), ராஜேஸ்வரி (முஞ்சிறை), ரமணிபாய் (கிள்ளியூர்), சாந்தினி பகவதியப்பன் (தோவாளை), தக்கலை ஒன்றிய துணை தலைவர் மவுண்ட் தேன் ரோஜா, உறுப்பினர்கள் பத்மநாபன், மனோகர குமார், மனோன்மணி, கிறிஸ்டி ஜெகதா, கோல்டன் மேல்பா, சிவகுமார், மேலாளர் நாஞ்சில் நிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி