தக்கலை அருகே சொத்தை எழுதி தராத மாமனாருக்கு சரமாரி வெட்டு கம்ப்யூட்டர் இன்ஜினியர் கைது

நாகர்கோவில், பிப்.20 : தக்கலை அருகே சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்காத மாமனாரை கத்தியால் வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர். குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வெள்ளிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆலிவர் ஜாண் (58). கூலி தொழிலாளி. இவரது மகள் அனிஷா ஜெனிபர். இவரது கணவர் பால் இமானுவேல் (32). கம்ப்யூட்டர் இன்ஜினியர். பால் இமானுவேலுக்கும், அனிஷா ஜெனிபருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம், சொத்தை எழுதி வாங்கி வருமாறு கேட்டு பால் இமானுவேல் தகராறு செய்துள்ளார்.

இது பற்றி அறிந்த ஆலிவர் ஜாணும், அவரது மனைவி லில்லியும் சென்று, எங்களது காலத்துக்கு பிறகு சொத்து உங்களுக்கு வரும் என மருமகன் பால் இமானுவேலிடம் கூறி உள்ளனர். ஆனாலும் சொத்தை எழுதி தராததால், முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மகளிடம், மருமகன் சண்டை போடுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து சமாதானம் செய்ய ஆலிவர் ஜாண், அவரது மனைவி லில்லி ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது அவர்களை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த பால் இமானுவேல், சொத்தை எழுதி தராமல் இங்கே வர கூடாது என கூறி உள்ளேன். பிறகு ஏன் இங்கு வந்தீர்கள் என கூறி கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆலிவர் ஜாண் கழுத்து, கன்னத்தில் வெட்டி உள்ளார். இதில் ஆலிவர் ஜாண் படுகாயம் அடைந்தார்.

இதை பார்த்ததும் அருகில் நின்ற லில்லி, அனிஷா ஜெனிபர் ஆகியோர் கதறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். இதையடுத்து பால் இமானுவேல், உங்களை கொலை செய்து சொத்தை கைப்பற்றுவேன் என கூறி மிரட்டி சென்றார். இந்த சம்பவம் குறித்து லில்லி தக்கலை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் எஸ்.ஐ. மாரிமுத்து விசாரணை நடத்தி, பால் இமானுவேல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். படுகாயம் அடைந்த ஆலிவர் ஜாண், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு