டெல்லியில் இருந்து மனச்சோர்வுடன் சேலம் திரும்பினார் அமித்ஷாவுடன் எடப்பாடி பேசியது என்ன?.. பரபரப்பு தகவல்கள்

சென்னை: ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பேச்சுவார்த்தை திருப்தி தராதநிலையில் மிகுந்த மனச்சோர்வுடன் சேலம் திரும்பியுள்ளார். அவர் என்ன பேசினார் என்பது குறித்து அதிமுகவினர் புதுத்தகவலை தெரிவித்து வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடந்த திங்கட்கிழமை அவசரம் அவசரமாக டெல்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்த நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கார் மூலம் நள்ளிரவு 12 மணியளவில் சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள வீட்டுக்கு வந்தார். நேற்று காலை சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் அவரை சந்தித்தனர். இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு இன்று (22ம்தேதி) ஆட்டையாம்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கிடையே அவர், வழக்கத்தை விட அப்செட்டான நிலையில் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கான காரணம் குறித்தும் பரபரப்பு தகவல்களை கட்சியினர் கூறி வருகின்றனர். இதுகுறித்து சேலம் அதிமுகவினர் கூறியதாவது: அதிமுக ஆட்சியின் போது டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்பட்டது. இதற்கு தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரிப்பதற்கு தடை இல்லை எனக் கூறிவிட்டது. அதேநேரத்தில் அதிமுகவில் உள்ள அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அவரின் கனவு தள்ளிக் கொண்டே போகிறது. எல்லாப்பக்கமும் இருந்து வரும் நெருக்கடியால் திணறிப்போன எடப்பாடி பழனிசாமி, பாஜ தலைவர்களின் உதவியை நாடினார். இதற்காகவே அவர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். ஆனால் பாஜ தலைவர்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிகப்படியான எம்பி சீட்டுகளை பெறவேண்டும் என்பது நோக்கமாகும். இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் என்று எல்லோரும் ஒருங்கிணைந்த அதிமுகவாக மீண்டும் சேர வேண்டும். நாங்கள் கேட்கும் தொகுதிகளை தரவேண்டும். எங்கள் தலைமையில்தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே தன்னை சந்திக்கலாம் என அமித்ஷா நிபந்தனை விதித்துள்ளார். தற்போது தனக்கு இருக்கும் நெருக்கடியை சமாளிப்பதற்காக முதற்கட்டமாக நீங்கள் கேட்கும் தொகுதிகளை தந்து விடுகிறோம். எங்கள்மீது அமலாக்கத்துறை ரெய்டு போன்ற நெருக்கடிகள் வராமல் பாதுகாக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். ஆனாலும் அமித்ஷா இதற்கு பிடி கொடுக்கவில்லையாம். முதலில் உடைந்த கட்சியை ஒன்று சேருங்கள். பிறகு பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு ஆளான எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்திப்பதாக இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு அவசர அவசரமாக சேலம் திரும்பியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பாஜவினர் 40 தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது பாஜவினர் கேட்ட இடங்களை கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி புறம் தள்ளினார். ஆனால் பாஜ தனித்து நின்று தேர்தலில் படுதோல்வியடைந்தது. இம்முறை அதிமுகவில் இருக்கும் உள்கட்சி மோதலை கையில் எடுத்துள்ள பாஜ, எப்படியாவது அதிமுகவை தங்கள் கைவசம் கொண்டு வந்து 20 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் நெருக்கடியில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பாஜ தலைவர்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிகப்படியான எம்பி சீட்டுகளை பெற வேண்டும் என்பது நோக்கமாகும். …

Related posts

புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சீமான் கோரிக்கை

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு