டெல்டாவில் கட்டுமான பணிகள் பாதிக்கும் அவலம்: எம் சாண்ட், ஜல்லிக்கற்கள் தட்டுப்பாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி இயங்க நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் சாலை, கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர்கள் இயங்கி வருகிறது. ஒரு காலத்தில் மனித சக்தி மூலம் கல்குவாரிகள் இயங்கி வந்த நிலையில், தற்போது அறிவியல் வளர்ச்சி காரணமாகவும், தேவை அதிகரிப்பதாலும் மனித சக்தியை விட அதிகளவு கல்குவாரிகளில் மிஷனரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட டெல்டா, கடற்கரையோர மாவட்டங்களுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கட்டுமானம், சாலை பணிக்காக ஜல்லி கற்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் திருமயம் பகுதியில் இயங்கும் கல்குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, விவசாய நீர்நிலைகளுக்கு நீர் வரும் வரத்து வாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கல்குவாரிகளாக மாற்றப்பட்டதால் நீர் வரத்து குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே 15 நாட்களுக்கு முன் அனுமதி இன்றியும், புறம்போக்கு நிலத்தில் செயல்படும் கல்குவாரிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்ததோடு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கல்குவாரி இயங்க தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் மாவட்ட கலெக்டர், மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு மேலும் 3 வாரத்திற்கு கல்குவாரி இயங்க தடை விதித்துள்ளார். இதனால் ஏற்கனவே மாவட்டத்தில் எம்சாண்ட், பி சாண்ட் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மேலும் 3 வாரத்திற்கு தடை நீடித்திருப்பது கல்குவாரி நடத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் புதுக்கோட்டையிலிருந்து ஜல்லிக்கற்கள், எம்சாண்ட், பிசாண்ட் உள்ளிட்டவைகள் செல்வதால் வீடு கட்டுபவர்களும், அரசு ஒப்பந்ததாரர்களும் சாலை பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாக எம் சாண்ட், பிசாண்ட், ஜல்லிக்கல் விலையும் கனிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒரு யூனிட் ஜல்லிக்கற்கள், எம்சாண்ட், பிசாண்ட் சுமார் ரூ.600 முதல் 1000 வரை விலையேற்றம் கண்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் மணல் குவாரிகள் தடை செய்யப்பட்டு, ஒருசில இடங்களில் மட்டுமே செயல்படுவதால் மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கல்குவாரி இயங்க தடை விதித்திருப்பது வீடு கட்டும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. மேலும் 3 வாரம் மாவட்டம் முழுவதும் கல்குவாரி இயங்க நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் எம்சாண்ட், பிசாண்ட், ஜல்லிக்கல் தட்டுப்பாடு ஏற்பட்டு மேலும் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை