டெங்கு டேட்டா!

நன்றி குங்குமம் டாக்டர் கடந்த சில ஆண்டுகளாகவே நம்மிடையே டெங்கு காய்ச்சல் பருவகால நோயாகப் பரவி வருகிறது. அதிலும் மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு பரவும் அபாயமும் தொடர்கதையாகிவிட்டது. காரணம், டெங்கு குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே என்கின்றனர் மருத்துவர்கள். டெங்கு எதனால் ஏற்படுகிறது, எப்படிப் பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன, அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி போன்றவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் வி. அஸ்வின் கருப்பன்.  டெங்கு காய்ச்சல் என்பது என்ன? டெங்கு என்பது கொசுவால் பரவக்கூடிய ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். இன்பெக்டட் ஏடீஸ் எஜிப்டை மஸ்கிட்டோ ( Infected Aedes egypti mosquitoes) என்று மருத்துவ உலகில் சொல்கிறோம். அதாவது பெண் கொசு ஒருவரைக் கடித்துவிட்டு மீண்டும் மற்ற ஒருவரைக் கடிக்கும்போது அவருக்கு டெங்கு வருகிறது. டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன? காய்ச்சல் விட்டுவிட்டு வரும். மூன்று நாட்கள் காய்ச்சல் இருக்கும். பிறகு, முன்று நாள் கழித்து மீண்டும் காய்ச்சல் வரும். இதனை ‘சேடல் ஃபேக் பீவர்‘ என்று சொல்வோம். அதுபோல பிரேக் போன் பீவர் இருக்கும். இவர்களுக்கு கை, கால் மூட்டுகளில் வலி கடுமையாக இருக்கும். இதைத்தவிர தலைவலி கடுமையாக இருக்கும். கண்ணுக்குப் பின்னால் வலிக்கும். சிலருக்கு மலம் கருப்பாக போகும். டெங்கு பாதிப்பு அதிகம் இருந்தால் மூச்சு திணறல்கூட ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், டெங்கு தீவிரமாக பாதிப்பது என்பது மிகவும் குறைந்த அளவே வரக்கூடியது.டெங்கு காய்ச்சலை கண்டறிய என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?பொதுவாக, காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) அல்லது என்.எஸ்.ஐ ஆண்டிஜன் (NS1 Ag) உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். இதில் என்.எஸ் 1 கொசு கடித்தவுடனேயே நமக்கு பாஸிட்டிவ்வாகக் காண்பிக்கும். ஐ.ஜி.எம், ஐஜிஜி என்பது நோய் எவ்வளவு நாளாக இருக்கிறது என்பதைக் குறிப்பது. ஐஜிஎம். கொசு கடித்த ஏழு நாளில் தெரியும். ஐஜிஜி ஒரு வாரத்துக்கு மேல் ஆகும்போதுதான் தெரியும். பொதுவாக, காய்ச்சல் அதிகம் இருந்து, பிளேட்லட் குறைந்தாலே அது டெங்குக்கான அறிகுறியாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.டெங்குவுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது?டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமால் (Paracetomol) மாத்திரைதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஹைடரேஷனும், பாராசிட்டமலும்தான் அதுக்கு சரியான சிகிச்சைமுறை. டெங்கு வந்தால் பிளேட்லெட் போட்டுக்கொள்வது சரியானமுறையா?தற்போது டெங்கு வந்தவுடன் பிளேட்லெட்டை தேடி மக்கள் செல்கின்றனர். இது முற்றிலும் தவறானது. மக்கள் இப்படித் தேடி செல்வதினால் பிளேட்லெட் விலை அதிகரித்ததுதான் மிச்சம். மேலும், உண்மையாக பிளேட்லெட் தேவைப்படுகிற லுக்கிமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிளேட்லெட் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக, நமது உடலில் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 1.5 லிருந்து 5 லட்சம் வரை இருக்கும். ஆனால், டெங்கு காய்ச்சல் வந்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறையும். இது நார்மல் தான். அதுபோல், டெங்குவினால் குறையும் பிளேட்லெட், அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் தானாகவே கூடிவிடும். ஏனென்றால், பிளேட்லெட் ஒருவரின் உடலில் 24 மணி நேரம்தான் இருக்கும். அதனால் பிளேட்லெட் போட்டுக்கொண்டாலும் அது அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் அழிந்துவிடும். இது தெரியாமல் பயத்தினால் டெங்கு வந்தாலே உடனே பிளேட்லெட்டை போட்டுக்கொள்கிறார்கள். இது தேவையில்லை. டெங்கு தீவிரமாக இருந்தால் மட்டும்தான் பிளேட்லெட் தேவைப்படும். நல்ல சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டாலே மீண்டும் பிளேட்லெட் கூடிவிடும். எனவே டெங்கு வந்தாலே பிளேட்லெட் போட்டுக் கொள்வது என்பது எல்லோருக்குமானதல்ல. அதனை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Related posts

இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!

ப்ளுபெர்ரி பழத்தின் நன்மைகள்!

மன அழுத்தம் நீங்க சில எளிய வழிகள்!