டூவீலரில் லிப்ட் தருவதுபோல் பெண்ணிடம் நகை பறிப்பு

விருதுநகர், ஜூலை 4: விருதுநகரில் டூவீலரில் லிப்ட் தருவது போல நடித்து சென்னை பெண்ணிடம் நகை, பணத்தை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ராமர் மனைவி திலகம்(50). இவர், விருதுநகர் முத்தால்நகரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு செல்ல, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு வந்தார்.

நேற்று காலை விருதுநகர் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய திலகம், விருதுநகர் குட்ஷெட் ரோட்டில் நடந்துசென்றபடி செல்போனில் உறவினரை தொடர்புகொண்டு, முகவரி கேட்டுள்ளார். மேலும், ஆட்டோ பிடித்து வரவா எனவும் கேட்டுள்ளார். இதை நோட்டமிட்டு அந்த வழியாக டூவீலரில் வந்த மர்மநபர், முத்தால்நகர் தனக்கு நன்றாக தெரியும், டூவீலரில் அழைத்துச் சென்று பத்திரமாக இறக்கிவிடுகிறேன், ஆட்டோ பிடிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய திலகம் டூவீலரில் ஏறி அந்த நபருடன் சென்றார்.

முத்தால்நகர் அருகே வந்தபோது அந்த நபர் திடீரென டூவீலரை நிறுத்தினார். பின்னர், திலகம் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்செயின் மற்றும் அவரிடம் இருந்த ரூ.1000 பணத்தை பறித்துக்கொண்டு டூவீலரில் தப்பினார். இது குறித்த புகாரின்பேரில், விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை