டி20 உலக கோப்பைக்கு 95% நாங்க ரெடி: ரோகித் நம்பிக்கை

துபாய்: உலக கோப்பை டி20 தொடருக்கு 90 முதல் 95 சதவீதம் இந்திய அணி தயாராகிவிட்டதாக கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார். ஆசிய கோப்பை சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளைத் தழுவியதால், பைனலுக்கு முன்னேற மற்ற அணிகளின் செயல்பாட்டை ஏக்கத்துடன் கவனிக்க வேண்டிய பரிதாபமான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. இந்த எதிர்பாராத தோல்விகளுக்கு பலவீனமான பந்துவீச்சு, நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாதது, தவறான வீரர்கள் தேர்வு, பீல்டிங்கில் சொதப்பல், ஆவேஷ் கான், ஜடேஜா காயம் அடைந்தது… என்று ஏராளமான காரணங்கள் அணிவகுக்கின்றன. ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் தடுமாற்றம் குறித்து ரோகித் கூறியதாவது: உலக கோப்பைக்கு நாங்கள் 90 முதல் 95 சதவீதம் வரை தயாராகிவிட்டோம் என்றே நம்புகிறேன். ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்ய வேண்டி இருக்கும். அது குறித்து உரிய நேரத்தில் தக்க முடிவு எடுப்போம். ஆசிய கோப்பையில் நாங்கள் சில வித்தியாசமான வியூகங்களை பரீட்சார்த்தமாக முயற்சித்தோம். 4 வேகம், 2 ஸ்பின்னர்கள்… அதில் ஒருவர் ஆல் ரவுண்டர் என்ற வியூகம் எந்த அளவுக்கு எடுபட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான விடையை இன்னும் தேடி வருகிறோம். ஹர்திக் பாண்டியாவை 3வது வேகப் பந்துவீச்சாளராகக் கணக்கில் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். சூப்பர் 4 சுற்றில் அடைந்த தோல்விகளில் இருந்து நல்ல பாடம் கற்றுள்ளோம். உலக கோப்பைக்கு முன்பாக இன்னும் இரண்டு தொடர்கள் உள்ளன. இறுதி அணியை உறுதி செய்யும் வரை மேலும் சில வீரர்களுக்கு வாய்ப்பளித்து பார்ப்போம். இவ்வாறு ரோகித் கூறியுள்ளார்….

Related posts

ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்திடம் தோற்ற கியூபா வீராங்கனை கஸ்மான் லோபஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி

வினேஷ் போகத் தகுதி நீக்கம் – இந்தியா மேல்முறையீடு

வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி