டி.கல்லுப்பட்டி அருகே கார், வேன் மோதலில் 15 பேர் படுகாயம்

பேரையூர், ஆக. 6: மதுரையிலிருந்து விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூருக்கு நேற்று வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த வேனை தளவாய்புரம் முகவூரை சேர்ந்த டிரைவர் ராதகிருஷ்ணன் ஓட்டி வந்தார். அதில் மொத்தம் 12 பேர் பயணம் செய்தனர். இதேவேளையில் திருவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்று விட்டு சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு இதே ஊரை சேர்ந்த பாலவெங்கடேஷ் தனது குடும்பத்தினர் 6 பேருடன் காரை ஓட்டி வந்து கொண்டிருந்தார். டி.கல்லுப்பட்டி- ராஜபாளையம தேசிய நெடுஞ்சாலையில் வி.அம்மாபட்டி கண்மாய்க்கரை வளைவில் வந்த போது காரும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. மோதிய வேகத்தில் வேனின் முன்சக்கர அச்சு முறிந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி போனது.

கார் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த மானாமதுரையை சேர்ந்த பாலவெங்கடேஷ் (32), யாஷிகா (12) மதுரை அரசு மருத்துவமனைக்கும், காயமடைந்த காவியா (21), வினோதினி (31) உள்பட 4 பேர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். வேனில் பயணம் செய்து காயமடைந்த டிரைவர் ராதாகிருஷ்ணன், ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த முத்துக்குமரன், மாரியப்பன், கல்யாணசுந்தரம், பரசுராமன், ராமமூர்த்தி, ராஜூ, முருகன் உள்பட 12 பேர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டி.கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை