டி.ஆர்.பட்டினம் தொகுதியில் வீடு வீடாக நோட்டீஸ் வினியோகித்த பெண் தாதா எழிலரசி ஆதரவாளர்கள்-பாஜகவில் சீட் கிடைக்குமா?

புதுச்சேரி : தலைமறைவாக இருக்கும் பெண் தாதா எழிலரசியின் ஆதரவாளர்கள் காரைக்கால் டி.ஆர்.பட்டினம் தொகுதி மக்களிடம் ஆதரவு திரட்ட வீடு, வீடாக நோட்டீஸ் வினியோகித்து வருகின்றனர்.காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்த சாராய வியாபாரி ராமு (எ) ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு 2 மனைவிகள் உண்டு. அதில் ஒருவர்தான் எழிலரசி. இந்த கொலைக்கு அப்போதைய சபாநாயகர் வி.எம்.சி சிவக்குமார் காரணம் என்று எழிலரசி குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி சிவக்குமார் 2017ம் ஆண்டும் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.இவ்வழக்கில் கைதான எழிலரசி ஜாமீனில் விடுதலையானார். பின்னர் 2018ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மீண்டும் ஜாமீன் பெற்றார். பெண் தாதா எழிலரசி மீது மூன்று கொலை வழக்குகள், கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், வெடிமருந்து பயன்படுத்தி மிரட்டுதல், மோசடி வழக்குகள், அடிதடி வழக்குகள் என  இதுவரை 14 வழக்குகள் உள்ளன.இந்த நிலையில் மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டதாக கூறி எழிலரசி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிஆர் பட்டினம் போலீசார், அவரை தேடி வரும் நிலையில் பாஜக தலைவர் சாமிநாதனை சந்தித்து எழிலரசி அக்கட்சியில் இணைந்தார்.இந்நிலையில் வருகிற தேர்தலில் டி.ஆர்.பட்டினம் தொகுதியில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளது. இருப்பினும் கூட்டணியில் இத்தொகுதி யாருக்கு என்பது உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே பெண் தாதா எழிலரசி, சட்டமன்ற தேர்தலில் சீட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.ரவுடிகளின் கூடாரமாக பாஜக மாறிவருவதாக விமர்சனம் எழுந்ததால், எழிலரசியை மவுனமாக இருக்க பாஜக உத்தரவிட்டதாக தகவல் வெளியாகின. இதற்கிடையே காரைக்கால் டி ஆர் பட்டினம் போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் எழிலரசி தலைமறைவானார்.வேட்பு மனுதாக்கல் நெருங்கி விட்ட நிலையில், பெண் தாதா எழிலரசியின் ஆதரவாளர்கள் காரைக்கால் டிஆர் பட்டினம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.எஸ்.ஆர்.ஆர், அறக்கட்டளை எனும் பெயரில் எழிலரசியின் ஆதரவாளர்கள் வீடு வீடாக ஆதரவு கேட்டு தேர்தல் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.அதில் தங்களது அறக்கட்டளை மூலம் தொகுதியில் நடைமுறையில் உள்ள நலத்திட்டங்களை குறிப்பிட்டுள்ளதோடு, தேர்தலில் வென்றவுடன் அமல்படுத்தவுள்ள பணிகள் குறித்த பட்டியலையும் பிரசுரித்துள்ளனர். அதில் பெண்கள், மீனவர், விவசாயிகள், இளைஞர்கள், சிறுபான்மையினர், மாற்று திறனாளிகளுக்கு தங்களது அறக்கட்டளை சார்பில் உள்ள நலத்திட்டங்களின் விவரத்தை குறிப்பிட்டுள்ளனர்.டி.ஆர்.பட்டினம் வாக்காளர்கள் தங்களுக்கு ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமென எழிலரசி தரப்பில் வேண்டுகோள் விடுக்கும் வகையில் இந்த நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாஜகவில் சீட் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் எழிலரசி தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் டி.ஆர்.பட்டினம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படாவிடில், எழிலரசி சுயேட்சையாக களமிறங்கலாம் எனக்கூறப்படுகிறது….

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு