டாஸ்மாக் கடைகளின் அருகில் செயல்படும் கடைகளில் உணவு தரமானதா?

கரூர், ஏப். 19: கரூர் மாநகராட்சியில் டாஸ்மாக் கடைகளின் அருகில் செயல்படும் உணவு விற்பனை கடைகளில் தரமான உணவு வழங்கப்படுவது குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் 90 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இதில், ராயனூர், தாந்தோணிமலை, வெங்ககல்பட்டி, கரூர் பேருந்து நிலையம், வெங்கமேடு, காந்திகிராமம் போன்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகளின் அருகிலேயே மாலை நேரங்களில் மீன், சிக்கன் போன்ற அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடைகளுக்கு வரும் குடிமகன்களும் இதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளை மையப்படுத்தி இதுபோன்ற கடைகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில், இந்த கடைகளின் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் தரமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, உணவுப் பொருட்களின் தரம் குறித்து சோதனை நடத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை