டாஸ்மாக்கில் பழகியவரை தாக்கி கரை கடத்திய கல்லூரி மாணவன் கைது: கஞ்சா வாங்க கார் கடத்தியது அம்பலம்: இருவருக்கு போலீஸ் வலை

திருப்போரூர்: மதுக்கடையில்  பழகியவரை தாக்கி காரை கடத்திச்சென்ற கல்லூரி மாணவன்  கைது. மேலும் இருவருக்கு போலீஸ் வலை வீசி வருகின்றனர்.சென்னையை அடுத்த கேளம்பாக்கம்  தனியார் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களை, சென்னையிலிருந்து கொண்டு வந்து கேளம்பாக்கத்தில் இறக்கிவிடும் தனியார் டிராவல்ஸ் நிறுவன டிரைவராக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் பாபு (40). இவர், கடந்த திங்கட்கிழமை பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் கேளம்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள  டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அதே மதுக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்த சுமார் 18 முதல் 20 வயது வரை உடைய மூன்று பேர் கொண்ட கும்பல்  ரமேஷ்பாபுவிடம் பேச்சுக் கொடுத்தனர். இதனை தொடர்ந்து,  மது அருந்தி முடித்துவிட்டு அங்கிருந்து புறப்படும்போது மூன்று பேரும் மெயின் ரோட்டில் விட சொல்லி ரமேஷ் பாபுவிடம் உதவி கேட்டுள்ளனர். பின்னர்,  நால்வரும் ரமேஷ்பாபுவின் காரில்  கேளம்பாக்கம் அடுத்த ஓஎம்ஆர் சாலை செங்கண்மால் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காரில் உதவி கேட்ட மர்ம நபர்கள் 3 பேர் கொண்ட கும்பல்.  ஓட்டுநர் ரமேஷ்பாபுவை  சரமாரியாக தாக்கிவிட்டு  காரிலிருந்து வெளியே அவரை தள்ளிவிட்டனர். பின்னர்,  காரை எடுத்துக் கொண்டு தப்பித்து  சென்றுவிட்டனர். இதையடுத்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம்  ரமேஷ் பாபு அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தனிமையில் தனிப்படை அமைத்தனர்.  சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்த  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ரமேஷ் பாபுவை தாக்கி காரைக் கடத்திச் சென்றது கேளம்பாக்கம் அடுத்த  தையூர், பெரிய பில்லேரி, பட்டினத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகுல் (24) மற்றும் அவரது நண்பர்கள் சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கணேஷ் மற்றும் நிவேதன் ஆகிய மூன்று பேர் என தெரியவந்தது.இதையடுத்து, ராகுல் என்பவனை கேளம்பாக்கம் போலீசார் நேற்று  கைது செய்தனர். பின்னர், விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மூவரும் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் என்பதும், கஞ்சா வாங்க காரை கொள்ளை அடித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும், அவனுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச்சென்ற சோழிங்கநல்லூரைச் சேர்ந்த கணேஷ் மற்றும் நிவேதன் உள்ளிட்ட இருவரையும்  கேளம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்….

Related posts

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது