டாக்டர் வீட்டின் பூட்டு உடைத்து 30 சவரன் நகைகள், பணம் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை: திருவண்ணாமலை அருகே பரபரப்பு

திருவண்ணாமலை, டிச.19: திருவண்ணாமலை அருகே டாக்டர் வீட்டின் பூட்டு உடைத்து 30 சவரன் நகைகள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு(30). தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது குடும்பத்தினருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகேயுள்ள தனது சொந்த ஊரான தாழனூர் கிராமத்துக்கு சென்றிருந்தார். பின்னர், நேற்று காலை மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, பூட்டுகள் உடைக்கப்பட்டு வீட்டின் இரும்பு கேட் மற்றும் கதவு திறக்கப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த டாக்டர் பாபு, வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது, அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் வைத்திருந்த சுமார் 30 சவரன் தங்க நகைகள், இரண்டு வெள்ளி கொலுசுகள் மற்றும் ₹5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இரவு நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து நீண்ட நேரமாக, நிதானமாக ஒவ்வாரு பொருட்களாக எடுத்து அலசி ஆராய்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் டாக்டர் பாபு கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ேமலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கைப்பற்றிய தடயங்களின் அடிப்படையில் இரண்டு நபர்கள் வீட்டுக்குள் நுழைந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் விரிவாக்கப்பகுதிகளில், பூட்டப்பட்டுள்ள வீடுகளை குறிவைத்து நடக்கும் திருட்டுச்சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபடலாம் என்ற சந்தேத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் வீட்டின் பூட்டுகளை உடைத்து 30 சவரன் நகைகள், பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்