ஜோசியக்காரரின் உத்தரவால் கட்சிக்காரர்களை சந்திக்காமல் வீட்டுக்கு வந்த மாங்கனி விஐபியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் விவகாரம் எந்த லெவல்ல இருக்கு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் வெயிலூர் உட்பட பல்வேறு நகரங்களில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மெகா ஊழல் நடந்து அம்பலமாகிக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக விசாரிக்க அரசு முடிவு செஞ்சிருக்கு. வெயிலுக்கு பேர்போன ஊர்ல ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை எடுத்த கான்ட்ராக்டர்கள் அதை அப்படியே சப் கான்ட்ராக்டர்களிடம் கொடுத்துட்டாங்களாம். இதனால் இப்ப வரைக்கும் பல பணிகள் அரைகுறையா தரக்குறைவா முடிக்கப்பட்டும், பல பணிகள் பாதியிலேயே விடப்பட்டும் இருக்காம். இதுல பெரிய அளவுல கடந்த ஆட்சியில காசு பார்த்துட்டாங்களாம். அதோட சில பணிகளை செய்யாமலேயே பணத்தையும் எடுத்துட்டாங்களாம். இப்படி ஏகப்பட்ட குளறுபடியால, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல போட்ட சாலைகள் எல்லாம் இப்பவே குண்டும் குழியுமா பல்லிளிக்கிறது. இப்ப வெயிலூர்ல இதுதான் மக்கள் மத்தியில பேசப்படற விஷயமா இருக்கு’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலத்துக்காரர் டீம் கண்காணிப்பு வளையத்துக்குள் இருப்பதால் சின்ன மம்மியை சந்திக்க தவிர்த்தார்களாமே 2 மாஜி அமைச்சர்கள்.. அந்த விஷயத்தை கொஞ்சம் விரிவா சொல்லுங்க’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியில் சேலத்துக்காரர், தேனிக்காரர் என இரண்டு அணியாக எதிரும்புதிருமாக செயல்பட்டு வருவதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள சின்னமம்மி   திட்டமிட்டுள்ளார். நெற்களஞ்சிய மாவட்டத்தில் முகாமிட்டு உள்ள சின்னமம்மி, அவரது சகோதரர் வீட்டில் தீவிர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சேலத்துக்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சர்களான கடலோர மாவட்டத்தை சேர்ந்த மணியானவர், மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த கர்ம வீரர் ஆகியோர் சின்ன மம்மியை தனது  வீட்டிலேயே சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை சின்ன மம்மியின் சகோதரர் மேற்கொண்டாராம். சேலத்துக்காரர் அணியில் சந்தேக லிஸ்டில் இருக்க கூடிய மணியானவர், கர்மவீரரையும் சேலத்துக்காரர் டீம் 24 மணி நேரமும் கண்காணிப்பு  வளையத்துக்குள் வைத்து இருப்பதால் இந்த சந்திப்பு திடீரென  தவிர்க்கப்பட்டதாம்… இதனால் சின்ன மம்மி கடும் அப்செட் ஆனாராம்… ஆனால்  திரைமறைவில் மணியானவர், கர்மவீரரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து  வருகிறதாம்… விரைவில், சின்ன மம்மியை ரகசியமாக நேரில் சந்திக்க  வாய்ப்புள்ளதாம்… அதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடக்கிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘இரண்டு பக்கமும் ஒரே உளவு வேலையாத்தான் இருக்காமே…’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர் மாவட்டத்தின் பட்டியில் முடியும் தொகுதியின் இலைக்கட்சியின் சிட்டிங்  எம்எல்ஏ, திடீரென தேனிக்காரர் அணிக்கு தாவினார். மேலும், முதல்வர் அறிவித்ததற்கான தொகுதியின் 10 கோரிக்கைகளில் ஒன்றாக 58ம் கிராமக்  கால்வாய்க்கு நிரந்தர அரசாணையும், தண்ணீர் திறக்கவும் கோரிக்கை வைத்தார். இதுபற்றி அறிந்த சேலத்துக்காரருக்கு ஆதரவான இலைக்கட்சியின் மாஜி மந்திரியான  உதயமானவரும் மாவட்ட நிர்வாகத்தை நேரில் பார்த்து, எம்எல்ஏ என்ற முறையில்  இதே கோரிக்கையை வைத்துள்ளாராம்… ‘என்னோட கோரிக்கையை, அவங்களும் கையில் எடுத்துக்கிறாங்க…’ என பட்டி தொகுதி சிட்டிங் எம்எல்ஏ ஜாடை மாடையாக பேசி  வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாக இவர் தொகுதிக்குள்  ஆதரவாளர்களை அதிகளவு அழைத்துக் கொண்டு வலம் வருகிறாராம்… விரைவில் தேனிக்காரரோடு சுற்றுப்பயணம் செய்து சேலத்துக்காரரின் பக்கம் இருக்கிற முக்கியப்புள்ளிகள் சிலரை வளைக்கப் போவதாக பேசிக் கொண்டிருக்கிறார். மேலும், அந்த அணியிலிருந்து பலர் எங்க பக்கம் வரப்போறாங்க எனவும் பேசி  வருவதால், மாஜி மந்திரி அதிர்ச்சி அடைந்துள்ளார். எதற்கும் அந்த பக்கம் சேருவது மாதிரி சேர்ந்து, என்ன மேட்டர் நடக்குது என தெரிந்து கொண்டு  வரும்படி, தனது அடிப்பொடிகளிடம் மாஜி மந்திரி உத்தரவிட்டுள்ளாராம்… தொகுதிக்கு வேலை செய்வாங்கன்னு ஓட்டுப் போட்டா, இவங்க என்னடான்னா இப்படி  உளவு வேலை பார்த்துக்கிட்டிருக்காங்களே என 2 தொகுதி மக்களும் டென்ஷன்ல  இருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஜோசியக்காரரின் உத்தரவை தான் மாங்கனி விஐபி இப்ப எல்லாம் கேட்கிறாரு போல..’’ என கேட்டுக்கொண்டே வந்தார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்பதுதான் மாங்கனியாரின் முக்கிய குறிக்கோளாம். இதற்கான முதற்கட்ட காய் நகர்த்தலில்  வெற்றியும் பெற்று  இடைக்கால பொ.செ. ஆனாரு. ஆனால் தேனிக்காரரின் மேல்முறையீட்டில் அது நிறுத்தப்பட்டது. என்றாலும் ரெண்டாவது ரவுண்டில் மீண்டும் சேலத்துக்காரரின் கை ஓங்கிருச்சி. தற்போது மீண்டும் அப்பீலுக்கு சென்றுள்ள நிலையில், எப்படியும் தன்பக்கம் வெற்றி கிடைத்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்காராம் சேலத்துக்காரர். இந்தநிலையில்தான், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும். சாமிகும்பிட்டுவிட்டு நேராக வீட்டிற்குத்தான் செல்லவேண்டும். இடையில் கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்கக் கூடாது.  அவ்வாறு சந்தித்தால் தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் ஏழுமலையானின் சக்தி முழுமையாக உங்களுக்கு கிடைக்காது, கோஷமிடும் கட்சிக்காரர்களுக்கு சென்றுவிடும்னு ஜோசியக்காரர்கள் அவரது காதில் ஓதுனாங்களாம்.  நினைத்த காரியம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துல இருக்கும் சேலத்துக்காரரு, அதன்படியே செஞ்சிருக்காராம். திருப்பதியில் இருந்து  புறப்பட்ட கார் நேரா சேலம் நெடுஞ்சாலை நகருக்கு வந்திருக்கு. ஆனா பாருங்க  அவரை வரவேற்க எப்போதும் இருக்கும் அடிப்பொடிகள் யாரும் அங்க இல்லையாம்.  ஒத்தை ஆளா வீட்டுக்கு வந்து இறங்கினாராம். 5 மணிக்கு மேல வீட்டுக்கு வாங்கன்னு கட்சிக்காரங்களிடம் சொல்லிப்புட்டாங்களாம். சொல்லாம ஏன் அண்ணன் வந்தாருன்னு விவரம் தெரியாமல் முழித்தார்களாம் அப்பாவி அடிப்பொடிகள்..’’  என்றார் விக்கியானந்தா.     …

Related posts

பிரசாரத்தில் வலிய வந்து வம்பில் சிக்கிய பெண் வேட்பாளர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

இதுதானா உங்க டக்கு என சேலம்காரரின் முடிவை கிண்டல் செய்யும் தேனிக்காரரின் அணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா