ஜெயலலிதா மரணம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது: ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் 9வது சம்மனுக்காக நேற்று ஆஜரானார். அவரிடம் நீதிபதி 78 கேள்விகளை கேட்டார். அதற்கு அவர் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே அவர் பதிலளித்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ல் உடல்நிலை பாதிக்கப்பட்டு 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் கருத்து கூறினர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றியோ, உடல்நிலை குறித்தோ எந்த தகவலையும் அதிகாரிகளோ, அமைச்சர்களோ தெரிவிக்கவில்லை. இதனால் அவரது மரணம் குறித்த சந்தேகம் வலுக்க தொடங்கியது.கடந்த 2017 செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கமளித்தனர். மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவ குழுவை அமைக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரையின்படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஆணைய விசாரணை மீண்டும் தொடங்கியது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி உள்ளிட்டோருக்கு ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.இதை தொடர்ந்து, அதிமுக  இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர்கள் சி.திருமாறன் மற்றும் பிரகாஷ் ஆகியோருடன் ஆணையத்தில் ஆஜரானார். நேற்று காலை 11.30 மணிக்கு அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது. கடந்த 2016  செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்  என்ற விவரமும் எனக்கு தெரியாது.நான் சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு  நேரத்தில் என் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவரம் தெரியவந்தது. அடுத்த நாள்  பிற்பகலில் அப்போலோ மருத்துவமனை சென்ற போது அங்கிருந்த தலைமைச்  செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன் என்றார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு, அவரது உடல்நலன் குறித்த தகவல்களை  அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தெரிந்துகொள்வேன். அதற்கு ஆணையம், விசாரணைக்கு ஆஜரான ராமமோகன ராவ் வெளிநாடு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவையை  கூட்ட சொன்னதாகவும், நான்கு நாட்கள் பரபரப்பாக பேசி பின்னர் அமைதியாக  இருந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், இது தொடர்பாக ராமமோகன ராவ் என்னிடம் எதுவும் பேசவில்லை. ஒருவேளை  அவ்வாறு கேட்டிருந்தால்  உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய தலைமைச் செயலர் ராமமோகன ராவ் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்தோம், அவர்களும்  வந்துள்ளார்கள் என்று  என்னிடம் தெரிவித்தனர்.அப்போலோ மருத்துவமனை சிசிடிவி  கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை. நோயின் தன்மையை பொறுத்து  வெளிநாடுகளுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் சிசிக்சை அளிக்க  அரசியல் பிரபலங்களை உயர் சிகிச்சைக்காக அழைத்து செல்வது தவறு இல்லை. தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை  நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே. சசிகலாவின்  அழைப்பின் பெயரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க  மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்க கூறிய நிலையில்,  அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும்  எனக்கு தெரியாது என்றார். இதையடுத்து, விசாரணை நாளையும் (இன்று) தொடரும் என்று நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார்.ஜெயலலிதாவின் இதயநோய் பற்றி தெரியாது: விசாரணையில் ஓபிஎஸ் கூறுகையில், காவிரி கூட்டத்திற்கு பிறகு ஜெயலலிதாவிற்கு இதய பிரச்னை ஏற்பட்டு உடல் நலனில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது எனக்கு தெரியாது. ஆனால் அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் நான் முதல்வரின் உடல்நிலை குறித்து  விஜயபாஸ்கரிடம் கேட்டதற்கு, இதய பிரச்னை இருந்ததை கூறினார். ஜெயலலிதாவிற்கு இதய பாதிப்பு ஏற்பட்ட போது என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. யார் முடிவு செய்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது என்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்றார்.வெளிநாடு சிகிச்சைக்கு உறவினர்கள் அமைச்சர்கள் மறுத்தனர்: விசாரணை ஆணையத்தில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, மீண்டும் 3 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அப்போது, அவரிடம் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல தடையாக  இருந்தது எது என்று ஆறுமுகசாமி ஆனையம் கேள்வி எழுப்பியது.அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என்று அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோரிடம் சொன்னேன். அப்போலோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு  வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என சி.விஜயபாஸ்கர்  சொன்னார். மறுநாள் காலை அப்போலோ தலைவரிடமும், அவரது மருமகனிடமும் இதே கருத்தை வலியுறுத்தினேன். ஆனால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று அப்போலோ நிர்வாகம் தெரிவித்தது என்றார்.காவிரி நதிநீர் கூட்டம் நடந்தது தெரியாது: ஓபிஎஸ் மேலும் கூறுகையில், ஜெயலலிதா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நடந்த காவிரி நதிநீர் கூட்டம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அறிக்கை வந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். அந்த கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய தலைமைச் செயலர் ராமமோகன ராவிடம் கூட்டம் தொடர்பாக கேட்டபோது முதலமைச்சர் தனக்கு டிக்டேட் செய்ததாக என்னிடம் தெரிவித்தார்.கண்ணாடி வழியாக தான் பார்த்தேன்- இளவரசி: போயஸ்தோட்டத்தில் தங்கியிருந்தவரும், சசிகலாவின் அண்ணியுமான இளவரசி தனது வழக்கறிஞர் அசோகன், மகன் விவேக் ஆகியோருடன் நேற்று காலை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது, அவர் சசிகலா மூலமாக கடந்த 1992 முதல் முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. போயஸ்  தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் தங்கி  இருந்தாலும், என்னிடம் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவும் பகிர்ந்தது இல்லை. வீடு, குடும்பம்  தொடர்பாக மட்டும் பேசுவார். கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் சிறைக்கு சென்றேன். அப்போது அவர் உடல்நல குறைவாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.  2016 தேர்தலின்  போதும் உடல் நல குறைவாக இருந்தார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக்கொண்டார். நான் தினமும் சென்று பார்த்து  வருவேன். 75 நாளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாக தான் பார்த்திருக்கிறேன் என்றார்.எனக்காக விசாரணை ஆணையம் அமைக்கல: நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார், ஆணையம் அமைக்க யார் முடிவு செய்தது எனக்கேட்டார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற  அடிப்படையில் நானும் கையெழுத்திட்டுள்ளேன்.மெட்ரோ நிகழ்ச்சிக்கு பிறகு பார்க்கவே இல்ல : ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்துகொண்டபோது அவரை பார்த்தேன். அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை. ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு  இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாகவே தெரிந்து கொண்டேன் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.78 கேள்விகள்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒ.பன்னீர் செல்வத்திடம் சுமார் 3.30 மணி நேரமாக விசாரணை நடத்தியது ஆறுமுகசாமி ஆணையம். அப்போது, 78 கேள்விகள் கேட்கப்பட்டது, கேட்கபட்ட பல கேள்விகளுக்கு தெரியாது.. தெரியாது..  தெரியாது என பதிலளித்தார் ஓபிஎஸ்.விசாரணை நடத்தும் வளாகம் முழுவதும் அதிமுகவினர் சூழ்ந்ததால் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு  ஒரு வழியாக கூட்டத்தை கலைத்து அனுப்பிய போலீசார்.  விசாரணை ஆணையத்திற்குள்   நுழைய முயன்ற அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர். சுமார் 20 நிமிடங்களாக மின்சாரம் இல்லாததால் விசாரணை நாளை நடைபெறுகிறது. ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பாக நாளை  ஒரு சில கேள்விகளே கேட்கப்பட உள்ளதாகவும்,  சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விசாரணை ஆணையத்தில் இளவரசி மற்றும் பன்னீர் செல்வம் ஒருவரையொருவர் சந்தித்து கொள்ளவில்லை இளவரசியுடன் அவரது மகன் விவேக்கும் வந்திருந்தார். இளவரசி காலை 10.30 மணிக்கு விசாரணை ஆணையம் வந்தார். அவரிடம் 11.35 மணி வரை விசாரணை நடந்தது. ஆனால் 11 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு வந்திருந்தார்.இளவரசியிடம் விசாரணை நடந்து கொண்டிருந்ததால், பக்கத்து அறையில் 35 நிமிடம் அமர்ந்திருந்தார். பின்னர் 11.40 மணிக்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடந்தது. பிற்பகல் 1.45 மணி வரை விசாரணை நடந்தது. பின்னர் உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது. பின்னர் 4.45 மணிக்கு விசாரணை முடிந்து வெளியில் வந்தார். இடையில் சுமார் 20 நிமிடம் மின்சாரம் தடை ஏற்பட்டது. மொத்தத்தில், ஓ.பன்னீர்செல்வத்திடம் 3.30 மணி நேரம் விசாரணை நடந்தது….

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு