ஜெயங்கொண்டம் அருகே சிவில் இன்ஜினியர் மர்ம சாவு

ஜெயங்கொண்டம், ஜூன் 23: ஜெயங்கொண்டம் அருகே சிவில் இன்ஜினியர் மர்மமான நிலையில் இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (37). இவர் சிவில் இன்ஜினியர். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் விக்கிரவாண்டி -தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த நான்கு வழிச்சாலை பணி செய்து வரும் தனியார் நிறுவனத்திடமிருந்து இவர் சப் கான்ராக்ட் எடுத்து பணியை கடந்த இரண்டு வருடங்களாக செய்து வருகின்றார். சுதாகர் மீன்சுருட்டி அருகே நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மேல் தளத்தில் வாடகைக்கு தங்கி வசித்து வந்தார்.

இவருடன் ராஜபாளையம், கே.புதூர், வடக்கு தெருவை சேர்ந்த இளங்கோ என்பவரும் கடந்த ஒரு மாத காலமாக அவருடன் தங்கி வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. கடந்த 16ம் தேதி தனது சொந்த ஊருக்கு சுதாகர் சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் மாலை நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு மது அருந்தி விட்டு வந்துள்ளார். நேற்று காலை இவருடன் தங்கி இருந்த இளங்கோ பாத்ரூம் செல்ல வந்த போது சுதாகர் இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுதாகர் போதையில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு