ஜெயங்கொண்டத்தில் உழவர் நல திட்டப்பணிகள் வேளாண் அதிகாரி ஆய்வு

ஜெயங்கொண்டம், செப்.21: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை செயல்படுத்தி வரும் உழவர்நலத் திட்டங்கள் குறித்து மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.

எரவாங்குடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் நோக்கில் கண்டறியப்பட்டு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ள 15 ஏக்கர் தொகுப்பு நிலத்தைப் பார்வையிட்டு ஆவணங்களை ஆய்வு செய்தார். பின்பு சூரியமணல் கிராமத்தில் 1 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் வயலில் கோ-10 இரக கம்பு விதைப்பண்ணையில் வயலாய்வு மேற்கொண்டு தரமான விதை உற்பத்தி செய்ய பின்பற்ற வேண்டிய உரப்பரிந்துரை மற்றும் விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார்.

அட்மா திட்டத்த்pன்கீழ் அங்கராயநல்லூர் கிராமத்தில் பெண் விவசாயி பூங்கொடி வயலில் அமைக்கப்பட்டுள்ள அசோலா தீவன உற்பத்தி செயல் விளக்கத் திடலைப் பார்வையிட்டு தீவன அறுவடை குறித்தும் கால்நடைகளுக்கு இத்தீவனத்தை அளிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயியிடம் கேட்டறிந்தார்.
அட்மா திட்டத்தின்கீழ் ஆமணக்கந்தோண்டி கிராமத்தில் பெண் விவசாயி சரசு தோட்டத்தில் காய்கறிப் பயிர்கள் சாகுபடியில் பாலிதீன் நிலப்போர்வை அமைக்கப்பட்டுள்ள செயல் விளக்கத்திடலைப் பார்வையிட்டு விவசாயி பின்பற்றி வரும் சாகுபடி முறைகளை கேட்டறிந்து மகசூலை அதிகரிக்கும் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார்.

ஆய்வின்போது அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) பழனிசாமி, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுப்ரமணியன், வேளாண்மை அலுவலர் மகேந்திரவர்மன், துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தசாமி, உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வம், கவிதா, அட்மா திட்ட வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மகேஷ்குமார், ஆரோக்கியராஜ் மற்றும் முன்னோடி விவசாயிகள் உடனிருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு