ஜூஸ் கடையில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு சீல் கடைக்காரர் கைது வேலூர், காட்பாடியில்

வேலூர், ஆக.17: வேலூர், காட்பாடியில் ஜூஸ் கடையில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு சீல் வைத்து, கடைக்காரரை கைது செய்தனர். காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறையினர் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி, எஸ்பி மதிவாணன் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காட்பாடி இன்ஸ்பெக்டர் ஆனந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் காட்பாடி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

இதில் மாநகராட்சி 1வது மண்டல அலுவலகம் எதிரே உள்ள கடையில் சோதனை செய்தபோது, கடையில் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 20 கிலோ விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிந்து கடைக்காரர் அன்புவை(48) கைது செய்தனர். தொடர்ந்து அவரது வங்கி கணக்கு முடங்கப்பட்டது. மேலும் அவரது செல்போன் எண்ணும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அலுவலர் செந்தில் மற்றும், அலுவலர் ராஜேஷ் குழுவினர் சேண்பாக்கம் பகுதியில் ஆய்வுசெய்தபோது, ஒரு பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ய வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் 3வது முறையாக சிக்கியதால் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அதேபோல் கொணவட்டத்தில் ஜூஸ் கடையில் குட்கா விற்பனை செய்ததால் அந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. மொத்தம் 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை ெசய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார், உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரித்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி