ஜூலை 11ல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; கலெக்டர் தலைமையில் ஆலோசனை

தூத்துக்குடி, ஜூலை 5: தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 11ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்றடையும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம், வரும் 11ம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) ஐஸ்வர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி பேசுகையில், தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதேபோன்று அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் ‘மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் கடந்த டிசம்பர் மாதம் கோவையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில்,பொதுமக்கள் அதிகமாக அணுகும் அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக அனைத்து நகர்ப்புறங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஊரக பகுதிகளில் முகாம்கள் நடத்த முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி வருகிற 11ம் தேதி முதல் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது. தூத்துக்குடியில் உள்ள 12 வட்டாரங்களில் உள்ள 403 கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பயனடையும் வகையில் அருகிலுள்ள கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து மொத்தம் 70 முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசு துறைகள் சார்ந்த 44 சேவைகள் (கோரிக்கைகள்) மீது தீர்வு காணும் வகையில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மேலும் அனைத்து முகாம்களிலும் கிராம பொதுமக்கள் பயனடையும் வகையில் மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் மக்களின் கோரிக்கைகளை பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சேவைகளைப் பெறுமாறும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து, அவர்களுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும் எளிதாகவும் உரியமுறையில் தீர்வு காண வேண்டும், என்றார்.

கூட்டத்தில் தூத்துக்குடி சப்-கலெக்டர் பிரபு, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை