ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

புதுச்சேரி, ஆக. 14: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று காலை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் புறநோயாளிகள் பாதிப்புக்குள்ளாகினர். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவுப் பணிக்கு வந்த நிலையில் மறுநாள் காலை கருத்தரங்க அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்டமாக மருத்துவரின் உடற்கூறாய்வில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் நேற்று காலை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவு வாயிலில் திரண்டு வந்து, பெண் மருத்துவர் கொலையில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும், மருத்துவர் கொலையில் பாதுகாப்பை உறுதி செய்யாத அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்