ஜவ்வாது மலையில் வயதாகி கண் தெரியாமல் தவிக்கும் ஒற்றை தந்த காட்டு யானை முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல கோரிக்கை ஆந்திர வனப்பகுதியில் இருந்து வந்தது

போளூர், செப்.9: ஜவ்வாது மலையில் வயதாகி கண் தெரியாமல் சுற்றித்தவிக்கும் ஒற்றை தந்த காட்டு யானையை முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திரா வனப்பகுதியிலிருந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 12 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் முகாமிட்டு இருந்தது. இந்த யானைகளால் ஜவ்வாதுமலையில் ஏராளமான குடிசைகள், பயிர்கள், மரங்கள் சேதமானது. இதில் சில காட்டு யானைகள் எதிர்பாராத விதமாகவும், மின்சாரம் தாக்கியும் இறந்தன. மீதி இருந்த 6 யானைகளை வனத்துறையினர் மயக்க ஊசி மூலம் பிடித்து முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு ெசன்றனர். இதில் ஒரு ஆண் யானை இந்த கூட்டத்தில் இருந்து விலகி தனியாக நடமாடி வந்தது. இப்போது அந்த யானையின் ஒரு பக்கம் தந்தம் விழுந்து ஒற்றை தந்தத்துடன் வயது முதிர்ந்து கண் பார்வையும் சரிவர தெரியாமல் நடமாடி வருகிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளுக்கும், மலைகளுக்கும் சென்று விட்டு பின்னர் மீண்டும் ஜவ்வாதுமலைக்கு வந்துள்ளது.

ஜமுனாமரத்தூர்- ஆலங்காயம் சாலையில் காவலுர் அருகில் ஒரு முருகன் கோயில் பக்கத்தில் கோயில் குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதால் யானைகள் கூட்டத்திற்கு அந்த இடம் மிகவும் பிடித்தமான பகுதியாக கருதப்படுகிறது. அந்த வகையில் தான் அந்த ஒற்றை யானை தற்போது காவலூர் விண்வெளி ஆய்வு மையம் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கு அருகே உள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இரவு நேரங்களில் உணவை தேடி விவசாய நிலங்களில் புகுந்து மாங்காய், பலாப்பழம், நெல்வயல் போன்றவற்றை சேதப்படுத்தி விட்டு செல்கிறது.

இதுகுறித்து மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தற்போது இந்த யானை வயது முதிர்வால் நடக்க முடியாமல் தவித்து வருகிறது. தனது உணவு தேவைக்காக கண்பார்வை சரியாக தெரியாத நிலையிலும் வேறு வழியில்லாமல் விவசாய நிலங்களுக்கு வருகிறது. மேலும் வயது முதிர்வு காரணமாகவும் அது அவதிப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஒற்றை தந்தம் ெகாண்ட யானை யாரையும் துன்புறுத்துவது இல்லை. தனக்கு ேதவையான உணவை எடுத்துக் கொண்டு அமைதியாக சென்று விடுகிறது. கண்பார்வை குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக எங்கே செல்கிறோம் என தெரியாமல் ஜவ்வாது மலையை சுற்றி வருகிறது. எனவே, அரசு மற்றும் வனத்துறையினர், போர்க்கால அடிப்படையில் இந்த யானையை மீட்டு முதுமலை யானைகள் முகாமில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தியாகராஜ சுவாமி கோயிலின் ஆடிப்பூர உற்சவ பெருவிழா கமலாம்பாள் தேர் கட்டும் பணி மும்முரம்

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு ஆற்று பகுதிகளுக்கு மக்கள்; குளிக்க செல்ல வேண்டாம்: மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டு கடனுதவி