ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்கு மத்தியில் நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூடுகிறது; நாளை எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்கு மத்தியில் நாளை மறுநாள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. நாளை எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வருகிற 24ம் தேதியுடன்  முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற 18ம் தேதி  (நாளை மறுநாள்) தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக  கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சி  வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டு உள்ளார். இதேபோல் துணை ஜனாதிபதி  வெங்கையா நாயுடுவின் பதவி காலமும் ஆகஸ்டு மாதம் 10ம் தேதியுடன் முடிகிறது.  இதற்கான தேர்தல் ஆகஸ்டு 6ம் தேதி நடக்கிறது. ஆளும் பாஜக மற்றும்  எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மழைக்கால கூட்டத் தொடரில் 24 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், அக்னிபாதை, மகாராஷ்டிரா அரசியல் கவிழ்ப்பு விவகாரம், விலைவாசி உயர்வு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, மத ரீதியிலான வன்முறைகள், வெறுப்பு பேச்சுகள், தடை செய்யப்பட்ட வார்த்தைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் எனத் தெரிகிறது. மேலும் 18 நாட்கள் நடக்கும் இந்த மழைக்கால கூட்டத் தொடரின் போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி, அனைத்து கட்சிகளுக்கும் ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவை பெறுவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதேபோல குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு அனைத்துக் கட்சிகளின் மாநிலங்களவைத் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும், மக்களவையின் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு இதுபோன்று அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமான நிகழ்வாகும். …

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு