Friday, July 5, 2024
Home » ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல் ஆணையம், நீதித்துறை சுதந்திரமாக செயல்படுமா?…வெடித்தது சர்ச்சை

ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல் ஆணையம், நீதித்துறை சுதந்திரமாக செயல்படுமா?…வெடித்தது சர்ச்சை

by kannappan

* தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிராக கொதித்தெழுந்த உச்ச நீதிமன்றம்* நீதிபதிகள் நியமனத்துக்கு எதிராக துணை ஜனாதிபதிகள், அமைச்சர் போர்க்கொடிஒரு நாட்டில் ஜனநாயகம் நீடித்து நிலைத்திருக்க தேர்தல் ஆணையம், நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியம். உலகமே வியக்கும் மிக சிறந்த ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை கொண்ட நம் நாட்டில், சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையமும், நீதித்துறையும் பல்வேறு விமர்சனங்களில் சிக்கி வருகிறது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய சரமாரி கேள்வி, கொலீஜியம் பரிந்துரை செய்யும் நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியது, ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது, கொலீஜியம் முறைக்கு எதிராக ஒன்றிய சட்டத்துறை அமைச்சர், முன்னாள் மற்றும் இன்னாள் துணை ஜனாதிபதிகள் பேசி வருவது என ஜனநாயகத்தின் மீது நம்பகதன்மை குறித்து கேள்வி எழுந்து உள்ளது. இவ்வளவு விமர்சனங்கள் திடீரென எழும்ப காரணம் என்ன? வாங்க பார்க்கலாம். இந்திய தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு.  இந்த அமைப்புக்கு   தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த ஆணையத்தை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில சட்டப்பேரவைகள், நாடாளுமன்ற தேர்தல்கள் என நாட்டின் ஜனநாயகத்தை காக்கும் வகையில் தேர்தல்களை நடத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் பணித்து உள்ளது. இந்த ஆணையத்தின் பணி தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். ஆனால், தேர்தல்களை ஆணையம் நியாயமாக நடத்துகிறதா? ஆணையர்கள் நியமனத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். சட்டத்தை மதித்து செயல்பட்டு, நாட்டின் குடிமகன்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையம், அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதுபோல் நடந்து வருகிறது. இதற்கு சமீபத்தில் நடந்த பல மாநில தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களையே உதாரணத்துக்கு சொல்லலாம்.அரசு இயந்திரமும், அரசியல்வாதிகளும் தங்களது கடமைகளை செய்ய தவறியபோதும், சட்டத்துக்கு உட்பட்டு நியாயமாக நடக்காத போதும், நீதி கேட்டு மக்கள் நாடுவதே தேர்தல் ஆணையமும், நீதித்துறையும் தான். ஆனால், இந்த அமைப்புகளில் உள்ள ஆணையர்கள் மற்றும் நீதிபதிகள் நியமனங்களில் வெடித்துள்ள சர்ச்சை நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதா அல்லது நீதித்துறைக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஈகோ பிரச்னையா? என்பது தெரியவில்லை. தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நியமிப்பதால், ஆளும்கட்சியின் கைப்பாவையாக அவர்கள் செயல்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், நீதிபதிகளை பரிந்துரை செய்யும் கொலீஜியம் போன்ற அமைப்புகளை தேர்தல் ஆணையரை நியமிக்க உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர் நியமனத்தில் நடைமுறை பின்பற்றாமல் இங்கி-பிங்கி போட்டு தேர்வு செய்தீர்களா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.  அதே நேரத்தில், ‘கொலீஜியம் பரிந்துரையை ஒன்றிய அரசு நிராகரிக்காமல் அப்படியே ஏற்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் உத்தரவிட போட வேண்டிய நிலைக்கு தள்ள வேண்டாம்’ என்று ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், நீதிபதிகளே, நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறை ஏற்று கொள்ள முடியாது என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர், முன்னாள் மற்றும் இன்னாள் துணை ஜனாதிபதிகள் போர்க்கொடி தூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து உள்ள மக்களுக்கு, தேர்தல் ஆணைய மற்றும் நீதித்துறை நியமனங்களில் வெளிப்படைதன்மையை கடைபிடித்து நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் உள்ளது. இந்த விவகாரத்தில் வெடித்துள்ள சர்ச்சைக்கு தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசு ஆகிய மூன்று அமைப்புகளே பதில் சொல்ல வேண்டும்.மீண்டும் நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம்?நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகிய ஜனநாயகத்தின் 3 தூண்களும் அதிகாரங்களை பிரிக்கும் கோட்பாட்டை மதிக்க வேண்டும். ஒன்றுக்கொன்று மற்றொன்றின் அதிகாரங்களில் ஊடுருவக்கூடாது. அவ்வாறு செய்தால் அது அரசு அமைப்பை சீர்குலைத்து விடும். தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா கடந்த 2015ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மக்களின் விருப்பத்தை நாடாளுமன்றம் பிரதிபலிக்கிறது. நாடாளுமன்றம் மக்களின் தேர்வு மற்றும் மக்களின் ஞானத்தைக் குறிக்கிறது. அதாவது அதிகாரம் மக்களிடம் இருக்கிறது. ஜனநாயக கட்டமைப்பிற்கு மிகவும் அவசியமான இத்தகைய பிரச்னையில் 7 ஆண்டுக்கும் மேலாக நாடாளுமன்றம் கவனம் செலுத்தாதது அதிருப்தி அளிக்கிறது. எனவே இந்த அவை மக்களவையுடன் இணைந்து பிரச்சனையை தீர்க்க கடமைப்பட்டுள்ளது. அது அவ்வாறு செய்யும் என நம்புகிறேன். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்*நீதிபதிகளே நீதிபதிகளைநியமனம் செய்யக்கூடாதுநாட்டின் சட்டத்துறை, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் மேலும் சில சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அதிலும் குறிப்பாக நீதிபதிகளை, நீதிபதிகளே நியமிக்கும் கொலீஜிய முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அரசோ, நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யக்கூடாது. அதற்கான ஒரு தனி சிஸ்டத்தை கொண்டு வர வேண்டும். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு*கொலீஜியத்துக்கு தெரிந்தவர்களேநீதிபதிகளாக பரிந்துரைஉயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் முறை திருப்திகரமாக இல்லை. கொலீஜியத்தில் உள்ள நீதிபதிகளுக்கு தெரிந்தவர்களை மட்டுமே நீதிபதிகளாக்க பரிந்துரைக்கின்றனர். தெரியாதவர்களை பரிந்துரைப்பதில்லை என்பதுதான் பிரச்னை. தகுதியானவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டுமே தவிர, கொலீஜியத்துக்கு தெரிந்தவர்கள் அல்ல.  உலகம் முழுவதும் அரசுதான் நீதிபதிகளை நியமித்து வருகிறது. இதனால், நீதித்துறையிலும் அரசியல் நிலவுகிறது. ஒன்றிய அரசு கொண்டு வந்த தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபோதே அரசு ஏதாவது செய்திருக்க முடியும். நீதித்துறையை மதிப்பதால் ஏதும் செய்யவில்லை. எப்போதும் அமைதி காப்போம் என்பது இதன் அர்த்தமில்லை. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 5 கோடிக்கு அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கும், நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதற்கும் கொலீஜியம் தான் காரணம். ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு*கொலீஜியம் என்றால் என்ன?100 ஆண்டுகளுக்கு முன்பாக நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசிடம் இருந்து வந்தது. அதன் பின் உச்ச நீதிமன்றம் தாங்களே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் வகையில் ‘கொலீஜியம்’ என்ற உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு மூலம் நியமனத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த கொலீஜியம் அமைப்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் செயல்படும். இந்த அமைப்பே, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்து, ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்வார்கள். அவர்களை ஒன்றிய அரசு நியமிக்கும்.* நீதிபதிகள் நியமன ஆணை சட்டம் என்றால் என்ன?நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறையை மாற்ற கொண்டு வரப்பட்டதுதான் தேசிய நீதிபதிகள் நியமன ஆணை சட்டம் 2014. இது, நாட்டில் உயர்நிலை நீதிபதிகளை நியமிக்கவும், பதவி உயர்வு மற்றும் இடம் மாற்றம் செய்யவும் உருவாக்கப்பட்ட சட்டம்.  இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய நீதிபதிகள் நியமன ஆணை சட்டத்தை ரத்து செய்தது.* மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் என்ன சொல்கிறது?தேர்தல்களை  விதிமுறைகளின் படி நடத்த 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டம் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது மற்றும்  பட்டியலை திருத்தி அமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவரிக்கிறது. தேர்தலுக்கான  அறிவிப்பு வெளியிடுதல், வேட்புமனுதாக்கல், மனுபரிசீலனை, மனு வாபஸ்  பெறுதல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும்  இச்சட்டத்தின்படியே பின்பற்றப்படுகிறது. தேர்தல் முடிவுகள் அல்லது தேர்தல்  தொடர்பாக எழுப்பப்படும் அனைத்து பிரச்னைகளும், வழக்குகளும் இச்சட்ட  விதிமுறைகளுக்கு ஏற்ப கையாளப்படுகின்றன. இந்த சட்டத்தின் கீழ் தேர்தல்  தொடர்பான வழக்குகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றத்தில் தொடரலாம். ஆனால்,  தேர்தல் முடிந்த பிறகே வழக்கு தொடர முடியும். தேர்தல் நடைமுறை  செயல்பாட்டில் இருக்கும்போது இதுபோன்ற வழக்குகளை தொடர முடியாது. இந்தியத்  தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் மற்றும் ஆணைய அதிகாரிகளின் செயல்பாட்டால்  பாதிக்கப்படுவோர் இந்த சட்டத்தின் கீழ் தீர்வு காண முடியும்.*‘ஆபரேஷன் தாமரை’வாய் திறக்காத தேர்தல் ஆணையம்2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் சுமார் 11 மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்தது. பின்னர், அந்த மாநிலங்களில் பாஜ பெரும்பான்மையுடனும், கூட்டணியுடனும் ஆட்சி அமைத்தது.இதற்கு பல நூறு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக கூறப்    படுகிறது. பாஜ ஆட்சியில் 8 ஆண்டுகளில் 8 தலைமை தேர்தல் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் கூட ‘ஆபரேஷன் தாமரை’ குறித்து கேள்வி எழுப்பவில்லை. எம்எல்ஏக்களை இழுக்க தொடங்கி பாஜ, தற்போது, கவுன்சிலர்களுக்கும் கோடிக்கணக்கில் பேரம் பேச தொடங்கி உள்ளது. இதேபோல், குஜராத்தில் நடந்த 2ம் கட்ட தேர்தலில், அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார். வாக்குப்பதிவு அன்று காலை மோடி, 2.30 மணி நேரம் ரோடு ஷோ நடத்தி வாக்களித்தார். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.*தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்று காட்டியவர் டி.என்.சேஷன்தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை, தன்னாட்சி அதிகாரத்தை இழந்துவிட்டது, தேர்தல்களை நியாயமாக நடத்துவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் பதவி காலத்தில் நிரூபிக்கப்பட்ட ஆணையத்தின் அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. 1990 முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்த காலத்தில் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்தன. இதை அரசியல் கட்சிகள் இன்றும் சொல்லி வருகிறது. தேர்தல் ஆணையம் எவ்வளவு அதிகாரம் மிகுந்த அமைப்பு என்பதை நிரூபித்து காட்டிய பெருமை சேஷனை சேரும். தேர்தலின்போது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது போன்ற அராஜகங்களுக்கு முடிவுகட்டியவர் டி.என்.சேஷன்.*தேர்தல் புனிதத்தை தடுக்க முடியாதுஉத்தரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் சதார் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு 2 நாட்கள் முன்னதாக, மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்காக வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டனர். காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் அவர்களால் வாக்களிக்க போக முடியவில்லை,’’ என்று வழக்கறிஞர் ஒருவர் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டிஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வில் விசாரித்தது. அப்போது, “ஜனநாயகத்தில் தேர்தலுக்கு என புனித தன்மை உள்ளது. அதன் செயல்முறையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது,’’என்று நீதிபதிகள் வழக்கறிஞரிடம் கூறினர்.*விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடலாம்உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், ‘1991ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் ஆணையர்கள் சேவை மற்றும் சம்பள சட்டமானது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாதுகாக்கிறது. தேர்தல் ஆணைய நியமனங்களில் விதிமுறை மீறல் இருக்கிறது என்றால் நிச்சயமாக நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால், யாரை நியமிப்பது என்பதில் ஒன்றிய அரசிடம் உள்ள அதிகாரங்கள் மிகவும் முக்கியமானது,’ என கூறினார்….

You may also like

Leave a Comment

eleven − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi