சோழவந்தான் அருகே விரிசலான தொட்டிப்பாலத்தால் வீணாகி வரும் பாசன நீர்: பராமரிக்க விவசாயிகள் வேண்டுகோள்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பழுதடைந்த தொட்டிப் பாலத்திலிருந்து பாசன நீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கோவில்பட்டி முதல் மலையூர் வரை சுமார் ஒரு கி.மீ தூர நீளத்திற்கு தொட்டிப் பாலம் உள்ளது. பேரணையிலிருந்து கால்வாயில் திறக்கப்படும் பாசனநீர், வி.கோவில்பட்டியில் திருமங்கலம் கிளைக் கால்வாயாக பிரிந்து இத்தொட்டிப் பாலம் வழியாக செல்கிறது. இதன் மூலம் முதலைக்குளம், செக்கானூரணி, மேலஉரப்பனூர், விமான நிலையப்பகுதி வரை உள்ள 33 கண்மாய்களில் நீர் நிரப்பி, சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இக்கால்வாய் பராமரிப்பில்லாமல், பல இடங்களில் விரிசலடைந்து, நீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் கண்மாய்களுக்கு உரிய நீர் செல்வதில்லை.  மேலும் பாலப்பகுதியில் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதுடன், தூண்களில் பெரிய மரங்கள் வளர்ந்துள்ளதால் இதன் உறுதித்தன்மை பாதிக்கிறது. இதுதொடர்பாக பொதுப்பணித் துறையினரிடம் விவசாயிகள் புகாரளித்தும் பலனில்லை என வேதனைப்படுகின்றனர். இதுகுறித்து பாசனக் கமிட்டி தலைவர் எம்.பி. ராமன் கூறுகையில், “ இக்கால்வாய்க்குரிய பாலம் 1982ம் ஆண்டு அப்போதைய உசிலம்பட்டி எம்எல்ஏ ஆண்டித்தேவரின் முயற்சியால் கிடைத்தது. கடைக்கோடி பகுதிக்கும் உரியநீர் விரைவில் செல்வதற்காக, வழக்கமான தரைப்பகுதி கால்வாயாக அமைக்காமல், உயரமான தொட்டிப் பாலத்தில் ஒரு கி.மீ தூரம் கால்வாய் அமைத்தனர். தமிழக அளவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இது போல் தொட்டிப் பாலம் உள்ளது. இத்தகைய சிறப்பான பாலம் பராமரிப்பில்லாமல் நீர் வீணாக வெளியேறுவதால் கடைக்கோடி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதை பராமரித்து புதுப்பிக்குமாறு பலமுறை பொதுப்பணித்துறையினரிடம் புகாரளித்தும் பலனில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அவர் கூறினார்….

Related posts

மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது..!!

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குநர் மோகன் ஜி கைது

சென்னை கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!!