சோலார் விளக்கு பழுதால் இருளில் மூழ்கும் மலைக்கிராமங்கள்

வருசநாடு : வருசநாடு அருகே, சோலார் விளக்கு பழுதால் மலைக்கிராமங்களில் இருளில் மூழ்குவதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அவதிப்படுகின்றனர். வருசநாடு அருகே அரசரடி, வெள்ளிமலை, இந்திராநகர், நொச்சிஓடை, பொம்மராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில், கடந்த 40 ஆண்டுகளாக பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமங்களில் மின்சார வசதியில்லை. இதனால், அரசு மூலம் மேகமலை ஊராட்சி நிர்வாகம் மற்றும் தனிநபர்களுக்கும் சோலார் விளக்குகள் மற்றும் பேனல் போடுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 6 மாதமாக சோலார் விளக்குகள் பழுதடைந்து மலைக்கிராமங்கள் இருளில் மூழ்குகின்றன. இதனால், இரவு நேரங்களில் முதியவர்கள், பெண்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர்.இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் அரிக்கேன் விளக்குகள், சுவரொட்டி விளக்குகள், மெழுகுவர்த்திகள், மண்ணெண்ணெய் விளக்குகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மலைக்கிராமங்களில் பழுதான சோலார் விளக்குகளை சீரமைக்க தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மலைக் கிராமவாசி கருப்பசாமி கூறுகையில், ‘சோலார் விளக்குகள் பழுதால், இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு அவதிப்படுகிறோம். இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், இதுவரை சோலார் விளக்கு வழங்கப்படவில்லை. எனவே, தேனி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்….

Related posts

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்திய விமானப்படையின் ஏர் ஷோ சென்னை குலுங்கியது: 15 லட்சம் பேர் பரவசம்

மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சிக்கு முதல்வர் வாழ்த்து