Monday, October 7, 2024
Home » சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான்!

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான்!

by kannappan

“நாட்டை சுத்தமாக்குவது இருக்கட்டும். முதலில் வீட்டை சுத்தமாக்குவதற்கு ஏதேனும் ‘திட்டம்’ உங்களிடம் இருக்கிறதா?” என்று திருநெல்வேலி வாசகி அனுசுயா மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். நியாயமான கேள்விதான். ‘வேதம் புதிது’ படத்தில் “நீங்க படிச்சி வாங்கின பட்டமா?” என்று சிறுவன் கேள்வி எழுப்பும்போது, சத்யராஜுக்கு ‘பளார் பளார்’ என்று கன்னத்தில் அடிவாங்கியதைபோல இருக்குமே, அதுமாதிரி ஃபீலிங்.நாம் முதலில் வீட்டை சுத்தப்படுத்துவதை பற்றிதான் தொடங்கியே இருக்க வேண்டும். Better late than never. நம்முடைய முந்தைய தலைமுறையினர் வீட்டில் இருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தவே போகி கொண்டாடியிருக்கிறார்கள். பொங்கலுக்கு வெள்ளை அடிக்கவேண்டும் என்று வருடத்தின் ஒருநாளை ஷெட்யூல் செய்து ஒட்டுமொத்த மாநிலம் மொத்தமுமே வருடாவருடம் தன் வீட்டை பளிச்சென்று புதுப்பித்துக் கொள்ளும் சுகாதார கலாச்சாரம் உலகில் வேறெங்காவது இருந்திருக்குமா என்பது அதிசயமே. தமிழ் கிராம கலாச்சார மரபின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் பின்னணியாக ஏதோ ஓர் உருப்படியான காரணம் இருந்திருக்கிறது.ஆனால், இப்போது நவீன வாழ்க்கை முறை அமைத்துக் கொடுத்திருக்கும் நகர சொகுசின் பக்கவிளைவாக அந்த மரபிலிருந்து முற்றிலுமாக துண்டித்துக் கொண்டிருக்கிறோம். பால் காய்ச்சும் போது பளிச்சென்று இருக்கும் வீடு, பத்தே மாதத்தில் அலுத்துப் போகும் அளவுக்கு தூசியும், தும்புமாக… பொருட்கள் எல்லாம் ஆங்காங்கே சிதறி… போட்டது போட்டபடியாக அலங்கோலம் ஆகி விடுகிறது. அதிலும் பேச்சிலர் தங்கும் வீட்டின் நிலைமையை சொல்லவே தேவையில்லை.ஏதாவது பொருள் வைத்த இடத்தில் இல்லையென்று தேடும்போதுதான், இப்படி வெடிகுண்டு விழுந்து சின்னா பின்னமாகி இருக்கும் வீட்டை பார்த்து கோபம் வருகிறது. இதையெல்லாம் சீர்படுத்தி, ஒழுங்காக எப்படிதான் அடுக்கப் போகிறோமோ என்று தலைமேல் கையை வைத்து உட்கார்ந்து விடுகிறோம். பிரசவ வைராக்கியம் மாதிரி வாராவாரம் ஒவ்வொரு அறையாக துப்புரவு செய்துவிடலாம் என்று சபதம் ஏற்கிறோம். முதல் வாரம் ஏதோ ஒரு ரூமை கஷ்டப்பட்டு சீர் செய்துவிடுவோம். அடுத்த வாரம் வாய்க்காது. ஏதோ வேலை அல்லது பங்ஷன். அதற்கு அடுத்த வாரம் ‘மூட்’ அமையாது. இப்படியே தள்ளிக்கொண்டே போய்விடும். ஏற்கனவே சீர்செய்த அறை, இதற்குள்ளாக பழைய நிலைமைக்கு வந்துவிடும். வீடு சுத்தமாக இருந்தால், வைத்த பொருள் வைத்த இடத்தில் இருந்தால்… பாதி டென்ஷன் நமக்கு குறையும். மாதத்துக்கு ஒருமுறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறையோ தகுந்த இடைவெளியில் துடைப்பத்தோடு குடும்பமே களமிறங்கிவிட்டால் ‘ஹேப்பி ஹோம்’ என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு நிஜமாகவே அர்த்தம் உணரலாம்.நம் முகத்தையே தூங்கி எழுந்து அப்படியே கண்ணாடியில் பார்க்க நமக்கு சகிக்காது. வெளியில் போகும்போது தலைசீவி, லேசாக பவுடர் போட்டு ஏன் போகிறோம். நாலு பேரு பார்த்தா நல்லா இருக்கணும்னுதானே? வீட்டுக்கும் அதேதான் லாஜிக். புத்தகங்களை, டிவிடிகளை, துணிமணிகளை எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தால் நாம் எதை தேடுகிறோமோ, அதை கண்டுபிடிப்பது ஈஸி. அப்படியில்லாமல் மொத்தமாக குவித்திருந்தால் அம்பாரத்தில் குண்டூசியை தேடும் கதைதான். எதையாவது தேடிதேடித்தான் நம்மில் பலருக்கும் இரத்த அழுத்தமே ஏற்படுகிறது.யாராவது சொந்த பந்தங்களோ, நண்பர்களோ திடீர் திக்விஜயம் செய்யும்போது சோபாவெல்லாம் அழுக்காக துணிமணியெல்லாம் இறைந்து கிடந்து, டைனிங் டேபிள் க்ளீன் செய்யப்படாமல் இருந்தால் ஒருமாதிரி அவமானமாக உணருகிறோம் இல்லையா? இதையெல்லாம் தவிர்க்கதான் ‘ஹோம் க்ளீனிங் ப்ராஜக்ட்’ சினிமாவில் வரும் கிராஃபிக்ஸ் மாதிரியெல்லாம் வீட்டை ஒரே சீனில் எல்லாம் சுத்தம் செய்துவிட முடியாது. இது நேரம் பிடிக்கும் வேலை. கடுமையான உழைப்பை கோரும் வேலை. இல்லத்தரசியின் தலையில் இந்த பாரத்தை போட்டுவிட்டு மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்ளக் கூடாது. குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சி இன்றி, சுத்தமான வீடு சாத்தியமே ஆகாது. எப்படி வீட்டை சுத்தப்படுத்தலாம் என்று தடிதடியாக ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. விலைகள் சில ஆயிரங்களில். பொழுதுபோகாத வெள்ளைக்கார இல்லத்தரசிகள் எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் வாசித்தால் ஒரு குழந்தையை பெற்று வளர்த்தெடுத்து, படிக்கவைத்து, கல்யாணம் கட்டி வைப்பது மாதிரியான நீண்டகால செயல்பாடு போல வீட்டை சுத்தம் செய்வது என்று பெரும் மனச்சோர்வு ஏற்படுகிறது.அதெல்லாம் தேவையே இல்லை. நாம் ஒரே அத்தியாயத்தில் முடித்துக் கொள்ளலாம். இந்த நாளில் நம் வீட்டை துப்புரவாக்குகிறோம் என்று ஒரு தேதியை ஃபிக்ஸ் செய்துகொள்ளுங்கள். உட்கார்ந்து யோசித்துக்கொண்டே இருந்தால் (அல்லது இதுமாதிரி சோம்பேறித்தனமாக எதையாவது படித்துக்கொண்டே இருந்தால்) எப்போதுதான் வேலையில் இறங்குவது. ஒருமுறை நீங்கள் தொடங்கிவிட்டால் முடித்துவிட்டுதான் அடுத்த வேலையை பார்க்க வேண்டும். அந்த தேதியை அடுத்த ஞாயிறு வைத்துக்கொள்ளலாமா? அதற்கு முன்பாக கீழ்க்கண்ட பொருட்கள் உங்கள் வீட்டில் பக்காவாக ‘ஸ்டாக்’ இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாத பொருளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். துடைப்பம், பிரஷ், ஸ்பாஞ்ச், டிஷ் சோப், பர்னிச்சர் பாலிஷ், க்ளாஸ் க்ளீனர், பாத்ரூம் க்ளீனர், பழைய நியூஸ் பேப்பர், பழைய துணி முதலானவை. வீட்டை சுத்தப்படுத்தலாம் என்று துடைப்பமும் கையுமாக களமிறங்கி விட்டோம். இம்மாதிரி நேரங்களில் முதலில் தோன்றும் கேள்வி.எங்கே தொடங்குவது?மனதுக்குள் எழும் இந்த கேள்வியே பலரை சோர்வாக்கி சோம்பலில் விழ வைத்துவிடுகிறது. சரி, மதியம் வரை டிவி பார்த்துவிட்டு சாயங்காலமாக வேலையில் இறங்கலாம் என்று தள்ளிப்போட்டு… மாலையும்கூட மறுநாள் அலுவலக உழைப்பை எண்ணி மலைத்து அப்படியே க்ளீனிங் ப்ளான் கேன்சல் ஆகிவிடுகிறது. நடக்கிறதா இல்லையா? அப்படியும் சோம்பலை ஒதுக்கிவைத்து விட்டு சுத்தம் செய்ய நினைப்பவர்கள், குன்ஸாக ஏதோ ஒரு அறையை தேர்ந்தெடுத்து ஏதோ ஒரு வேலையை தொடங்கிவிடுகிறார்கள். தேவையில்லாதவற்றை தூக்கி குப்பையில் போடுவார்கள். அடுத்த நொடியே ஃபேனை சுத்தம் செய்ய டேபிளை தேடுவார்கள். சுவற்றில் இருக்கும் கறையை கழுவுவார்கள். சீக்கிரமே டயர்டாகி, மீதியை அப்புறம் பார்த்துக்கலாம் என்று டிவி முன்பு போய் உட்கார்ந்து விடுவார்கள். எதையுமே ஒரு முறைக்கு நாலு முறை ப்ளான் பண்ணி பண்ணணும். கீழ்க்கண்டவாறு ஒரு ‘செக்லிஸ்ட்’ எழுதிவைத்துக் கொள்வது, உங்கள் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உதவும். ஒவ்வொருவரின் வீட்டில் இருக்கும் அன்றாட உபயோகப் பொருட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த பட்டியலை அவரவரே அவரவர் வீட்டுக்கு பொருந்துமாறு தயாரித்துக் கொள்ளலாம்.பாத்ரூம் :*  கண்ணாடி*  டாய்லட் சிங்க்*  சுவர்*  வாஷிங் மெஷின்கிச்சன் :* ஃப்ரிட்ஜ், அடுப்பு, மிக்ஸி* சமையல் சாமான்கள்* கிச்சன் சிங்க்* ஷெல்ஃப்தூசு துடைத்தல் :* பீரோ, டிவி ஸ்டாண்ட், சோபா போன்ற நகரும் அயிட்டங்கள்* ஜன்னல்* சீலிங் ஃபேன்* புக் ஷெல்ப்* கதவுகள்பெருக்குதல் :* தரை* படிக்கட்டு* பால்கனி* வாசல்* கொல்லைப்புறம்இப்படி நம் வீட்டின் தன்மைக்கு ஏற்ப ஒரு பேப்பரில் முதலில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. ஒவ்வொரு வேலையாக சரியாக முடித்துக் கொண்டே வரும்போதே, ‘டிக்’ அடித்துக்கொண்டே வந்தோமானால் மொத்தமாக முடியும்போது முழுமையாக சுத்தம் செய்திருப்பீர்கள். இப்படி திட்டமிடாவிட்டால் வேலை பாதியிலேயே நின்றுபோய்விடக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உண்டு. இப்படி எழுதிவைத்துக் கொள்வதால், ஏதோ ஒரு வேலையை மறந்து அரைகுறையாக முடியும் சாத்தியமும் இல்லை.சுத்தம் செய்வதைப் பொறுத்தவரை மேலிருந்து கீழ் என்கிற அணுகுமுறையே சுலபம். ‘சீலிங்கில் இருந்து தரைக்கு’ என்பதை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கீழே சுத்தப்படுத்திவிட்டு மேலே போகலாம் என்று போனால் வேலை இரட்டிப்பாகும். முதலில் குளியலறையில் இருந்து சுத்தம் செய்யும் பணியை தொடங்குவது ஈஸி. கையில் ரப்பர் கிளவுஸ் அணிந்துக் கொள்வது உத்தமம். டாய்லெட் சிங்குகளை கழுவ சுடுதண்ணீர் பயன்படுத்தலாம். சுவர்களை சோப்புநீர் கொண்டு பளிச்சென்று துடைக்கலாம். கண்ணாடியை துடைத்துவிட்டு.. சோப், பிரஷ் போன்றவற்றை அழகாக அடுக்கி வைத்தவுடனேயே.. சுத்தம் செய்யும் வேலை சூடுபிடித்துவிட்டதை உணர்வீர்கள். அடுத்தது கிச்சன். சோம்பேறித்தனப்படாமல் இருக்கும் மொத்த பாத்திரங்களையும் ஒருமுறை எடுத்துப்போட்டு நீரால் அலம்பி ஓரமாக வைத்துவிடுங்கள். எதுவெல்லாம் தினமும் தேவைப்படவில்லையோ, அதையெல்லாம் எடுத்து மூட்டை கட்டி பரண் மீது போட்டுவிடுவது உத்தமம். மீதியிருக்கும் பாத்திரங்களை ஷெல்ஃபில் அடுக்கிவிடுங்கள். அடுப்பு, பிரிட்ஜ், மிக்ஸியென்று அனைத்தையும் துடைத்துவிட்டு அழகாக அடுக்குங்கள்.கிச்சனை முடித்துவிட்டு பெட்ரூமுக்கு போகலாம். இங்கே முதலில் சின்னச் சின்ன விஷயங்களை ஒழுங்குபடுத்தலாம். பீரோ, துணிகள் அடுக்கி வைத்திருக்கும் ஷெல்ஃபுகளை சரி செய்துவிட்டு, அடுத்தகட்ட பணிகளுக்கு போகலாம். ஃபேன், ஏசி, விளக்குகளை துடைத்துவிட்டு படுக்கையை சீர் செய்யலாம். பெட்ஷீட், தலையணை கவர்கள் சீராக பராமரிக்கப்பட்டாலே போதும், படுக்கையறை சுத்தமாக இருப்பதான உணர்வு நமக்கு தோன்றும்.‘க்ளீன் ஹோம்’ திட்டத்தில் பெரும் உழைப்பு கோரும் வேலைகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டீர்கள். இதற்கு பிறகு மற்ற அறைகளில் பெருக்கும், துடைக்கும் வேலை மட்டும்தான் பாக்கி இருக்கும். ஒவ்வொரு வேலை முடிந்ததும் நீங்கள் முன்பே எழுதிவைத்த செக்லிஸ்டில் ஒவ்வொன்றாக டிக் செய்துக்கொண்டே வரும்பட்சத்தில் இன்னும் எதையெல்லாம் செய்யவேண்டும் என்பது புரியும். மாதத்துக்கு ஒருமுறை ஒரு வாரயிறுதியை ஒதுக்கிக் கொண்டு குடும்பமே இந்த பணியில் ஈடுபடுவது உத்தமம்.சில டிப்ஸ் :* கண்ணாடிகளை துடைக்க ஈரத்துணிகளுக்கு பதில் பழைய நியூஸ் பேப்பரை பயன்படுத்தலாம்.* கார்ப்பெட்டுகளை பேக்கிங் சோடாவில் பதினைந்து நிமிடம் ஊறவைத்துவிட்டு பயன்படுத்தலாம்.* வாஷிங் பவுடர் என்பது துணிகளை துவைக்க மட்டுமல்ல. தரைகளை கழுவ, பொருட்களை துடைக்கவும் பயன்படுத்தலாம். அழுக்கினை அகற்றும்.* க்ளீனிங்குக்கு பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்சுகளை அவ்வப்போது சுடுதண்ணியில் முக்கி எடுப்பது நல்லது. பாக்டீரியாக்களை அழிக்கும்.* ஃப்ரிட்ஜின் உட்புறத்தை சுத்தப்படுத்தும்போது சோடா பைகார்பனேட் பயன்படுத்தினால் ஸ்மெல் குறையும்.* பழைய சாக்ஸ், டீஷர்ட் போன்ற துணிகளை அப்படியே தூக்கி குப்பையில் போடாமல் துண்டு துண்டாக நறுக்கி வைத்துக் கொண்டால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உதவும். பைக், கார் துடைக்கவும் வேஸ்டாக பயன்படுத்தலாம்.* பேச்சுலராக இருந்தால் ஃப்ரெண்ட்ஸுகளை அழைத்துக் கொண்டு துப்புரவுப் பணியில் ஈடுபடலாம். வேலைக்கு வேலை, அரட்டைக்கும் அரட்டை.* மியூசிக், ஃப்ளாஸ்க் நிறைய டீ என்று அவரவர் ரசனைக்கேற்ப ஜாலியாக வேலை பாருங்கள்.கடைசியாக… ஒன்றே ஒன்றுதான் முக்கியம். இதையெல்லாம் எப்போதான் சீர் பண்ண போறோமோ என்று மட்டும் மலைத்து விடாதீர்கள். பொறுமையாக ஒவ்வொன்றாக செய்தால் சின்ன வீடு என்ன பெரிய பங்களாவையே சுலபமாக துப்புரவு செய்துவிடலாம்….

You may also like

Leave a Comment

15 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi