சொன்னாரே செஞ்சாரா? தொகுதி பக்கம் எட்டிப் பார்க்காத எம்எல்ஏ:கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார்

இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 2007ம் ஆண்டு மேற்கொண்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, கோவை கிழக்கு சட்டமன்ற தொகுதி, கோவை வடக்கு என பெயர்மாற்றம் பெற்றது. இத்தொகுதியில் தொழில் வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகள் சுத்தமாக இல்லை. போக்குவரத்து நெரிசல் என்பது பிரதான பிரச்னையாக உள்ளது. மாநகராட்சியில் இணைக்கப்பட்ட வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. ஜிஎஸ்டி வரி நெருக்கடி, மூலப்பொருள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு காரணமாக இத்தொகுதியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்கள் ஜாப்ஆர்டர் இன்றி தவிக்கின்றன. தொழில் வளர்ச்சியை மேம்படுத்த 10 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைத்து தருவேன் என இத்தொகுதி எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் கூறினார். ஆனால், நிறைவேற்றவில்லை. 25 சதவீத உற்பத்தி பொருட்களை அரசே கொள்முதல் செய்யவேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற குறுந்தொழில் முனைவோர்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டது. தமிழக வீட்டு வசதி வாரியத்தின் புறநகர் திட்டத்தின் கீழ், கோவை கணபதி மாநகர் பகுதியில், பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதில் முழுத்தொகையையும் செலுத்திய பயனாளிகளுக்கு வீடுகளுக்கான பத்திரம் கிடைக்கவில்லை என்பது தொடரும் குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால், இந்த பிரச்னையை தொகுதி எம்எல்ஏ கண்டுகொள்ளவே இல்லை. பாரதியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இழப்பீடு பல போராட்டங்களுக்கு பின் வழங்கப்பட்டது. அதுவும், முழுமையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தொகுதி முழுவதும், பல இடங்களில் தார்சாலைகள் முறையாக செப்பனிடப்படவில்லை. இது, தொகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால், தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை தீர்க்கப்படவில்லை. பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை. அவ்வப்போது விபத்து நடப்பது சகஜமாகிவிட்டது. இத்தொகுதியில் 7 இடங்களில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கணபதி, காந்திபுரம் ஆகிய இரு இடங்களில் மட்டுமே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரத்தினபுரி பகுதிக்குள் அரசு பஸ்கள் செல்ல முடியவில்லை. இங்குள்ள சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. எனவே, மினி பஸ் சேவை வேண்டும் என தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இத்தொகுதி எம்எல்ஏ அருண்குமார் தொகுதி பக்கமே எட்டிப்பார்க்காத காரணத்தால் இதுபோன்ற  பல்வேறு பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது என்கிறார்கள் தொகுதி  மக்கள். * ‘நிறைய பணிகள் செய்துள்ளேன்’எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் கூறும்போது, ‘‘தொகுதியில் குடிநீர் பிரச்னை என்பதே இல்லை. சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், மழைநீர் வடிகால், குப்பை அகற்றுதல் என மக்களின் அத்தியாவசிய பணிகள் அனைத்தும் செய்துவிட்டேன். இதே தொகுதியில் என்னால் மீண்டும் துணிந்து போட்டியிட முடியும். அந்த அளவுக்கு பணிகளை செய்துள்ளேன். கட்சி வேண்டுகோளை ஏற்று தற்போது பக்கத்து தொகுதிக்கு மாறியுள்ளேன்’’ என்றார்.* ‘மக்களை புறந்தள்ளிவிட்டார்’திமுக மகளிர் தொண்டரணி நிர்வாகி மீனா லோகு கூறும்போது, ‘‘கோவை வடக்கு தொகுதிக்கு அதை செய்வேன், இதை செய்வேன் என அருண்குமார் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால், ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அதிமுக இரண்டாக உடைந்தபோது, ஓபிஎஸ் அணிக்கும், இபிஎஸ் அணிக்கும் மாறி மாறி ஓடுவதிலேயே காலத்தை விரயம் செய்துவிட்டார். ஐந்தாண்டு காலம் தொகுதி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. ஓட்டு போட்ட மக்களை புறந்தள்ளிவிட்டார்’’ என்றார்….

Related posts

சொல்லிட்டாங்க…

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஆலோசனை !!